செயற்கை நுண்ணறிவை வெல்லும் மனித மாண்பு!

செயற்கை நுண்ணறிவு சார்ந்த முடிவுகள் வெறும் இலாப நோக்கிற்காகவும், அதிகார பலத்திற்காகவும் மட்டுமே எடுக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்வதே 'மாண்புமிகு மனிதநேயம்' என்னும் திருத்தூது மடலின் முக்கிய சிறப்பம்சமாகும்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற இறையியலாளரான பேராசிரியர் அன்னா ரோவ்லேண்ட்ஸ் அவர்கள், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் செயற்கை நுண்ணறிவு காலத்தில் மனித மாண்பை பாதுகாப்பது குறித்த முதல் திருத்தூது மடலான 'மாண்புமிகு  மனிதநேயம்' (Magnifica humanitas) எனும் மடலை, செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் மீது செலுத்தி வரும் ஆதிக்கத்தை எதிர்கொள்வதில், ஒரு மிக முக்கியமான பங்களிப்பு என்று விவரித்துள்ளார்.

மே 25, திங்களன்று, வத்திக்கானில் வெளியிடப்பட்ட இந்த திருத்தூது மடல் வேலைவாய்ப்பு, அரசியல், இடம்பெயர்வு, குடும்ப வாழ்க்கை மற்றும் உலகளாவிய மோதல்கள் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த உடனடி கவலைகளை முன்னிலைப்படுத்துகிறது என்றும் பேராசிரியர் ரோவ்லேண்ட்ஸ் அவர்கள் கூறியுள்ளார்.

வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள பேராசிரியர் ரோவ்லேண்ட்ஸ் அவர்கள், இந்த விடயங்களைப் பற்றி சிந்திப்பதில் மனிதகுலம் தாமதிக்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் விளைவுகள் ஏற்கனவே சமூகத்தை வடிவமைத்து வருகின்றன என்று எச்சரித்த அவர், இவற்றை எதிர்கொள்வதற்கான பொறுப்பு நிபுணர்களுக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் மட்டுமானது அல்ல, மாறாக அனைவருக்கும் உரியது என்பதை வலியுறுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த முடிவுகள் வெறும் இலாப நோக்கிற்காகவும், அதிகார பலத்திற்காகவும் மட்டுமே எடுக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்வதே இத்திருத்தூது மடலின் முக்கிய சிறப்பம்சம் என்று கூறியுள்ள பேராசிரியர் ரோவ்லேண்ட்ஸ் அவர்கள், அதற்கு பதிலாக, ஏழைகள், விளிம்பு நிலை மக்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் முதலில் கேட்கப்படுவதற்கான ஒரு பொதுவான தளத்தை உருவாக்குமாறு திருத்தந்தை அழைப்பு விடுக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

மனித வாழ்க்கை மற்றும் மாண்பின் அர்த்தத்தைப் பற்றி சிந்திக்குமாறு திருத்தந்தை விடுத்த அழைப்பை முன்னிலைப்படுத்தியுள்ள பேராசிரியர் ரோவ்லேண்ட்ஸ் அவர்கள், மேலாதிக்கம், மோதல் மற்றும் பொருளாதார அதிகாரத்தை மையமாகக் கொண்ட சித்தாந்தங்களை இந்த திருத்தூது மடல் விமர்சிப்பதாகவும், நேர்மை, பங்கேற்பு மற்றும் மனித ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு "அன்பின் நாகரிகத்தை" இந்த மடல் முன்மொழிவதாகவும் கூறியுள்ளார்.

தொழில்துறை மயமாக்கல், உழைப்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்து திருஅவை ஏற்கனவே கொண்டுள்ள சமூகப் போதனைகளின் பாரம்பரியத்தோடு இன்றைய செயற்கை நுண்ணறிவுப் புரட்சியை இந்த ஆவணம் இணைக்கிறது என்று குறிப்பிட்டுள்ள பேராசிரியர் ரோவ்லேண்ட்ஸ் அவர்கள், மேலும், இத்திருத்தூது மடலின் செய்தி வரவிருக்கும் தலைமுறையினரின் வாழ்வில் நிச்சயம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 மே 2026, 14:17