'இறைவா உமக்கே புகழ்' வார நிறைவு விழா: மே 23-ல் அசெர்ரா நகருக்கு திருத்தந்தை பயணம்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
மே 23, சனிக்கிழமையன்று அசெர்ரா நகருக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் வருகை குறித்த அறிவிப்பை வரவேற்ற காம்பானியா ஆயர் பேரவையின் தலைவர் அந்தோனியோ டி டோன்னா அவர்கள், இது உள்ளூர் திருஅவைக்குக் கிடைத்த ஒரு கொடை என்று குறிப்பிட்டார்.
அண்மையில் திருத்தந்தை பொம்பெயி மற்றும் நேப்பிள்ஸ் நகரங்களுக்கு மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணங்களைத் தொடர்ந்து அமையவிருக்கும் இந்த வருகை, படைப்பைப் பாதுகாப்பதற்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்குமாக அர்ப்பணிக்கப்பட்ட "இறைவா உமக்கே புகழ்" (Laudato Si’) வாரத்தின் நிறைவாக அமையும்.
அசெர்ரா நகரம், சட்டவிரோதக் கழிவு வணிகத்தாலும் பொதுமக்களின் நலவாழ்வைப் பாதித்துள்ள சுற்றுச்சூழல் குற்றங்களாலும் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டு, "நெருப்பு நிலம்" (Land of Fires) என்று அழைக்கப்படும் பகுதிக்குள் அமைந்துள்ளது.
இருப்பினும், இந்த ஒரு அவப்பெயரை மட்டுமே வைத்து இப்பகுதியை மதிப்பிட்டுவிடக் கூடாது என்று வலியுறுத்திய ஆயர் டி டோன்னா அவர்கள், இது போன்ற மாசுபட்ட இடங்கள் இத்தாலியின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கத்தான் செய்கின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.
சுற்றுச்சூழல் மாசினால் மக்கள் பாதிக்கப்பட்டபோதே, இயற்கையைக் காக்க 'இறைவா உமக்கே புகழ்' (Laudato si') என்னும் திருத்தூது மடல் திருஅவைக்கு உந்துதலாக இருந்தது என்று தெரிவித்த ஆயர் டி டோன்னா அவர்கள், இதனை வெறும் பசுமை ஆவணமாகச் சுருக்காமல், 'ரேரும் நோவாரும்' (Rerum Novarum) என்ற திருத்தூது மடலுக்கு இணையான கத்தோலிக்க சமூகப் போதனைகளின் முக்கியப் பகுதியாக அதனை விவரித்தார்.
அரசு நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு மேம்பட்டிருந்தாலும், சுற்றுச்சூழல் தூய்மை, நீதி, தொழிலாளர் உரிமைகள், கல்வி ஆகியவற்றில் கூடுதல் கவனம் தேவை என்று குறிப்பிட்ட ஆயர் டி டோன்னா அவர்கள், மேலும், படைப்பைப் பாதுகாத்தல், அமைதி, நீதி, நேர்மை ஆகியவை கிறிஸ்தவப் பொறுப்புணர்வின் பிரிக்க முடியாத கூறுகள் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
