திருத்தந்தை 14ஆம் லியோ திருத்தந்தை 14ஆம் லியோ  (AFP or licensors)

ருண்டு திருத்தூது நிர்வாகத்தின் புதிய திருத்தந்தை பதிலாளாக ஆயர் லைனஸ் என்கோமெஷோ நியமனம்!

தற்போது நமீபியாவின் ருண்டு (Rundu) திருத்தூது நிர்வாகத்தின் நிர்வாகியாகப் பணியாற்றி வரும் ஆயர் லைனஸ் என்கோமெஷோ (Linus Ngenomesho, OMI) அவர்களை, அதே நிர்வாகத்திற்கான திருத்தந்தை பதிலாளாக திருத்தந்தை நியமித்துள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், தற்போது வடக்கு நமீபியாவில் உள்ள கவாங்கோ-கிழக்கு பகுதியின் தலைநகரமான ருண்டு நகரின் திருத்தூது நிர்வாகத்தின் நிர்வாகியாகப் பணியாற்றி வரும் அமல மரி தியாகிகள் சபையைச் சேர்ந்த ஆயர் Linus Ngenomesho (OMI) அவர்களை, அதே திருத்தூதரக நிர்வாகத்திற்கான திருத்தந்தை பதிலாளாக நியமித்துள்ளார்.

ஆயர் Linus Ngenomesho (OMI) அவர்கள், 1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22, அன்று நமீபியாவின் விண்ட்ஹோக் உயர் மறைமாவட்டத்திலுள்ள ஓமடாண்டோ என்ற இடத்தில் பிறந்தார். இவர் தென்னாப்பிரிக்காவின் செடெராவில் உள்ள புனித ஜோசப் ஓப்லேட்ஸ் ஸ்கொலாஸ்டிகேட்டில் தத்துவம் மற்றும் இறையியல் பயின்றார். இவர் 2002 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று அமல மரி தியாகிகள் சபையின் (OMI) அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

விண்ட்ஹோக் உயர் மறைமாவட்டத்திலுள்ள கோபாபிஸில் உதவிப் பங்குத்தந்தை மற்றும் டாப்ராவில் உள்ள OMI பயிற்சி இல்லத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை உதவிப் பயிற்சி இயக்குனராகவும், 2003 முதல் 2009 வரை நமீபியா மறைமாநில OMI சபையின் மறைமாநில ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், 2004 முதல் 2008 வரை விண்ட்ஹோக்கில் உள்ள புனித போனிஃபாஸ் பங்கின் பங்குத்தந்தை மற்றும் OMI பயிற்சி இல்லத்தின் இயக்குனராகவும்  விண்ட்ஹோக் மறை வட்டத்தின் தலைவராகவும், 2004 முதல் 2020 வரை விண்ட்ஹோக் உயர் மறைமாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

2009 முதல் 2010 வரை உகஹாண்ட்ஜாவில் உள்ள புனித பீட்டர் கிளேவர் பங்கின் பங்குத்தந்தையாகவும், 2010- முதல் 2016 வரை நமீபியா மறைமாநில OMI சபையின் மறைமாநிலத் தலைவர் மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் பகுதியின் OMI சபைத் தலைவராகவும், மேலும், 2016 முதல் 2020 வரை நமீபியா ஆயர் பேரவையின் பொதுச் செயலாளராகவும் 2020 முதல் தற்போது வரை ருண்டு திருத்தூது நிர்வாகத்தின் நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 மே 2026, 11:48