பேராயர் ஹிக்ஸ் பேராயர் ஹிக்ஸ்   (AFP or licensors)

திருத்தந்தையின் புதிய திருத்தூதுமடலுக்கு பேராயர் ஹிக்ஸ் வரவேற்பு!

செயற்கை நுண்ணறிவின் சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வெளியிட்ட 'மாண்புமிகு மனித நேயம்' (Magnifica humanitas) என்னும் முதல் திருத்தூதுமடலை பேராயர் ரொனால்ட் ஹிக்ஸ் பாராட்டியுள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சிக்கு மத்தியில், கூட்டுப் பொறுப்பு, நெறிமுறை சார்ந்த நிர்வாகம் மற்றும் மனித மாண்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் அவசியத்தை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் மாண்புமிகு மனித நேயம் என்னும் திருத்தூதுமடல்  வலியுறுத்துவதை பேராயர் ரொனால்ட் ஹிக்ஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறிய பேராயர் ஹிக்ஸ் அவர்கள்,  திருத்தந்தை தனது தலைமைப் பொறுப்பை ஏற்ற ஆரம்ப காலத்திலேயே செயற்கை நுண்ணறிவு குறித்துப் பேச எடுத்த முடிவை வரவேற்றதுடன், செயற்கை நுண்ணறிவு என்பது எப்போதும் நிலைத்திருக்கப் போகும் ஒன்று என்றும், அது ஏற்படுத்தும் சவால்களை திருஅவை  தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இது தகுந்த நேரத்தில் வெளிவந்த, தற்போதைய சூழலுக்குப் பொருத்தமான மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு அவசியமான ஒன்று என்றும் அவர் விவரித்தார்.

இன்றைய உலகைப் பாதிக்கும் உண்மையான பிரச்சினைகளை எதிர்கொள்ளத் திருஅவை தயாராக இருக்கிறது என்பதைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் திருத்தூது மடல் எடுத்துக்காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ள பேராயர் ஹிக்ஸ் அவர்கள், தொழில்நுட்பத்தை நிராகரிப்பதற்குப் பதிலாக, பொது நலனுக்காகச் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு அறநெறிப்படியும் பொறுப்புணர்வோடும் பயன்படுத்தலாம் என்பது குறித்த உரையாடலைத் திருத்தந்தை ஊக்குவிக்கிறார் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் நியூயார்க் நகரை புதுமை மற்றும் வணிகத்தின் மையமாகக் குறிப்பிட்ட பேராயர் ஹிக்ஸ் அவர்கள், இந்த ஆவணம் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர்களைத் தாண்டியும் பலரால் பரவலாக வரவேற்கப்பட்டுள்ளது என்றும், வேலைவாய்ப்பில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்துப் பலரும் கவலைப்படுகிறார்கள் என்றும், குறிப்பாகத் தங்களின் எதிர்காலப் பணிகள் இந்தத் தானியங்கி முறையினால் இல்லாமல் போய்விடுமோ என்று இளைஞர்கள் அஞ்சுவதையும் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின்  இந்தத் திருத்தூதுமடலை, திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ அவர்களின் 'ரேரும் நோவாரும்' (Rerum novarum) ஆவணத்துடன் ஒப்பிட்டுப் பேசிய பேராயர் ஹிக்ஸ் அவர்கள், தொழில்துறை புரட்சியைப் போலவே இந்த டிஜிட்டல் புரட்சியும் சமூகத்தை மறுவடிவமைப்பு செய்து வருகிறது என்று கூறினார்.

இந்தத் திருத்தூதுமடல் மனிதநேயம், உழைப்பு, மாண்பு மற்றும் உறவுகள் குறித்த அடிப்படைத் கேள்விகளை எழுப்புகிறது என்று வலியுறுத்திய பேராயர் ஹிக்ஸ் அவர்கள், இது திருஅவையின் மேய்ப்புப் பணிக்கும் சமூகத்தின் எதிர்காலத்திற்கும் மிக முக்கியமான ஒன்றாக அமைகிறது என்றும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 மே 2026, 07:50