திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் இத்தாலி அதிபர் செர்ஜியோ மத்தாரெல்லா அவர்களைச் சந்தித்தபோது திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் இத்தாலி அதிபர் செர்ஜியோ மத்தாரெல்லா அவர்களைச் சந்தித்தபோது  (@Vatican Media)

திருத்தந்தையின் முதலாம் ஆண்டுப் பணி நிறைவு: இத்தாலி அதிபர் செர்ஜியோ மத்தாரெல்லா புகழாரம்!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் முதலாம் ஆண்டுப் பணி நிறைவை முன்னிட்டு, இத்தாலி அதிபர் செர்ஜியோ மத்தாரெல்லா தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் முதலாம் ஆண்டுப் பணி நிறைவை முன்னிட்டு, இத்தாலி அதிபர் செர்ஜியோ மத்தாரெல்லா அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இத்தாலிய மக்கள் சார்பில் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்த அவர், திருத்தந்தையின் அமைதிப் பணிகளையும் போதனைகளையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

மேலும் போர் நிறுத்தம், நீதி, உரையாடல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றிற்காக திருத்தந்தை தொடர்ந்து விடுத்து வரும் கோரிக்கைகளை அதிபர் மத்தாரெல்லா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைதிக்காக திருத்தந்தை விடுத்த அழைப்பு, மதம் கடந்து அனைவரிடமும் எதிரொலிப்பதாகக் குறிப்பிட்ட அதிபர் மத்தாரெல்லா அவர்கள், வன்முறை நிறைந்த இவ்வுலகில் அவரது வார்த்தைகள் நம்பிக்கையூட்டும் ஒளியாகத் திகழ்வதாகப் பாராட்டியுள்ளார்.

மேலும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அண்மையில் ஆப்பிரிக்காவிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தைப் பாராட்டியுள்ள அதிபர் மத்தாரெல்லா அவர்கள், இது அவரது மேய்ப்புப் பணி நெருக்கத்தின் ஆற்றல்மிக்க அடையாளம் என்றும், சகவாழ்வு, வளர்ச்சி, கல்வி மற்றும் மனித மாண்பிற்கு மதிப்பளிப்பதற்கான ஒரு செய்தி என்றும் விவரித்துள்ளார்.

அமைதிக்கான திருத்தந்தை அவர்களின் வழிகாட்டுதலைப் பாராட்டிய அதிபர் மத்தாரெல்லா அவர்கள், இத்தாலிய மக்கள் மீது அவர் காட்டும் அன்பிற்கு நன்றி தெரிவித்ததுடன், அவரது வருங்கால வருகைக்காக இத்தாலி காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, திருஅவை மற்றும் மனிதகுலத்திற்கு திருத்தந்தை ஆற்றிவரும் பணிகளுக்காக நல்வாழ்த்துகளை தெரிவித்து  அதிபர் தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 மே 2026, 11:58