திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் இத்தாலிய வங்கிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் இத்தாலிய வங்கிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது  (@Vatican Media)

பொருளாதாரமும் மனிதநேயமும்: நிதி நிறுவனங்களுக்கு திருத்தந்தை அழைப்பு!

வங்கிகள் வெறும் லாபத்திற்காக மட்டும் இயங்காமல், செல்வத்தை நீதியான முறையில் பகிர்ந்து அனைவருக்கும் பொருளாதார வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

பொருளாதாரச் செயல்பாடுகள் மனிதகுலத்திற்குத் தொண்டு செய்வதாக இருக்க வேண்டும் என்றும்; தாராளத்தன்மை, நீதி மற்றும் பொறுப்புணர்வுடன் படைப்பைப் பராமரிக்க கடவுள் விடுத்த அழைப்பைப் பிரதிபலிக்க வேண்டும் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.

மே 16, சனிக்கிழமையன்று, வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.

இத்தாலிய வரலாற்றில் பொதுநலனுக்காகவும் தொழில்முனைவிற்காகவும் அவர்கள் ஆற்றிய பங்கைப் பாராட்டிய திருத்தந்தை, துணிச்சல், படைப்பாற்றல் மற்றும் சேமிப்பு-முதலீடு இடையிலான கூட்டுறவே அவற்றின் தொடக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தன என்றும் குறிப்பிட்டார்.

மேலும் நிதி நிறுவனங்களின் சமூகப் பொறுப்பை வலியுறுத்திய திருத்தந்தை, தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் அமைப்புகளுக்கு இடையே செல்வத்தை மிகவும் நீதியான முறையில் பகிர்ந்தளிப்பதற்கும், பொருளாதார வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைப்பதற்கும் அவை உதவியுள்ளதாகக் தெரிவித்தார்.

வங்கித் துறைக்கு உள்ள பெரும் வலிமையால் அது சமூகத்தை முன்னேற்றவும் முடியும் அல்லது வறுமையை உண்டாக்கவும் முடியும் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நிதித்துறையில் உள்ளவர்கள் தங்கள் திறமையுடன் நேர்மையையும், தார்மீகப் பொறுப்பையும் இணைத்துச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வங்கிகள் பணத்தை விடவும் மனிதர்களுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மொழிந்த திருத்தந்தை, டிஜிட்டல் மயமான இன்றைய உலகில், மனித உறவுகளைச் சிதையாமல் காத்து, வாடிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு அவர்களைக்  கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, இந்த நிதி நிறுவனங்கள் முன்னெடுக்கும் பல்வேறு மனிதாபிமான மற்றும் கலாச்சாரத் திட்டங்களைப் பாராட்டிய திருத்தந்தை,வங்கிகளின் ஒவ்வொரு செயல்பாடும் பிறர்நலத்தையும், சமூக ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும் என்று வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 மே 2026, 11:28