வத்திக்கான் புதிய தூதர்களிடம் திருத்தந்தை வலியுறுத்திய 'நம்பிக்கையின் பாலங்கள்'
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
பெந்தெகொஸ்தே பெருவிழா நெருங்கும் வேளையில் திருப்பீடத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்களை வரவேற்ற திருத்தந்தை, பிரிவினைகளை ஒற்றுமையாக்கிய தூய ஆவியாரின் செயல்பாட்டைச் சுட்டிக்காட்டி, அதேபோல், உலக நாடுகளுடனான உறவில் திறந்த மனப்பான்மை, இருதரப்பு மரியாதை மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வை வளர்க்க வேண்டும் என்ற தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
மே 21, வியாழனன்று, சியரா லியோன், பங்களாதேஷ், ஏமன், ருவாண்டா, நமீபியா, மொரிஷியஸ், சாட் மற்றும் இலங்கை ஆகிய பல்வேறு நாடுகளிலிருந்து திருப்பீடத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, அமைதி, கலந்துரையாடல் மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பை மேம்படுத்துமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அதிகாரம் மற்றும் ஆயுதங்கள் மூலம் அல்லாமல், கலந்துரையாடல் மற்றும் ஒருமித்த கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் தூதரக உறவுகள் அமைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை, அனைத்துலக உறவுகளில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த நேர்மையான பேச்சுவார்த்தை அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஏழைகளையும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களையும் புறக்கணித்துவிட்டு, வெறும் அதிகாரம் அல்லது பொருளாதாரச் செழிப்பைக் கொண்டு மட்டும் உண்மையான நீதியை அளவிட முடியாது என்று வலியுறுத்திய திருத்தந்தை, மேலும், வளர்ந்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், தூதரக அதிகாரிகளும், அனைத்துலக அமைப்புகளும் சுயநலமற்ற ஒற்றுமையைக் கடைப்பிடிக்கவும், சமரச பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கவும், மனிதக் குடும்பத்தின் ஒற்றுமைக்காக உழைக்கவும் அழைப்பு விடுத்தார்.
இறுதியாக, தூதர்களை அந்தந்த நாடுகளுக்கும் திருப்பீடத்திற்கும் இடையிலான 'நம்பிக்கையின் பாலங்கள்' என்று வர்ணித்த திருத்தந்தை, உலகிற்குத் தேவையான அமைதியையும் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதையும் மேம்படுத்தும் தங்களது புதிய பணியைத் தொடங்கும் இத்தூதர்களுக்கு, வத்திக்கானின் முழு ஆதரவும் செபங்களும் எப்போதும் இருக்கும் என்றும் உறுதியளித்து தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
