கிரமட்டோர்ஸ்க் நகரில் ரஷ்ய இராணுவத் தாக்குதல் கிரமட்டோர்ஸ்க் நகரில் ரஷ்ய இராணுவத் தாக்குதல் 

உக்ரைன், லெபனோன் போர்ச் சூழல் குறித்து திருத்தந்தை கவலை; அமைதி நிலவ மீண்டும் கோரிக்கை!

புதன் மறைக்கல்வி உரையின் போது, உக்ரைன் மற்றும் லெபனோனில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் குறித்து திருத்தந்தை கவலை தெரிவித்தார். "போர் எதற்கும் தீர்வல்ல, அது வெறுப்பையும் துயரத்தையுமே அதிகரிக்கும்" என்று எச்சரித்த திருத்தந்தை, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ஆதரவை உறுதிசெய்ததுடன், அமைதி நிலவ அனைவரும் பாடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

போர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்லை; மாறாக, அவற்றை இன்னும் சிக்கலாக்குகிறது என்றும், மோதல்கள் என்பவை வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அப்பாவி உயிர்களை அழிப்பதோடு, வெறுப்பையும் வேதனையையும் மட்டுமே பலமடங்கு அதிகரிக்கும் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

மே 27, புதன்கிழமையன்று இடம்பெற்ற புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, உக்ரைனில் அண்மையில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் மற்றும் ரஷ்யா நடத்திய புதிய தாக்குதல்களை குறித்தும் கவலை தெரிவித்தார்.  

இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் உட்பட துயரப்படும் அனைவருக்கும் தனது நெருக்கத்தையும் ஆதரவையும் உறுதிப்படுத்திய திருத்தந்தை, போரினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களையும் 'அமைதியின் அரசியான' அன்னை மரியாவின் பாதுகாப்பில் ஒப்படைத்து  அமைதி நிலவ அனைவரும் பாடுபட வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், லெபனோன் பகுதியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் தாக்குதல்களுக்கு மத்தியில், அங்கு நிலவும் சூழல் குறித்து பேசிய திருத்தந்தை, லெபனோனில் இருந்து வந்திருந்த திருப்பயணிகளுக்குத் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்  கொண்டதுடன் அன்னை மரியா எப்போதும் தனது பிள்ளைகளைத் தாய்மை அன்போடு வழிநடத்திப் பாதுகாக்கிறார் என்பதை நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டினார்.

தொடர்ந்து போலந்து நாட்டுத் திருப்பயணிகளிடம் பேசிய திருத்தந்தை, அங்கு அன்னையர் தினம் கொண்டாடப்படுவதைச் சுட்டிக்காட்டி, தாராள மனதோடு உயிர்களை உலகிற்கு அளித்து, தங்கள் பிள்ளைகளுக்குக் கடவுள் மீதும் அண்டை வீட்டார் மீதும் அன்பு செலுத்தக் கற்றுக்கொடுக்கும் அனைத்துத் தாய்மார்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

ஒவ்வொரு மனித உயிரையும் "கருத்தரிப்பு முதல் இயற்கையான மரணம் வரை" தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று போலந்து நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, நம்பிக்கையாளர்கள் அனைவர் மீதும் இறைவனின் ஆசிர்வாதத்தை வேண்டி தனது உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 மே 2026, 14:39