செயற்கை நுண்ணறிவு செயற்கை நுண்ணறிவு 

செயற்கை நுண்ணறிவுக்கான புதிய வத்திக்கான் ஆணையம்!

செயற்கை நுண்ணறிவின் (AI) வேகமான வளர்ச்சியை ஆய்வு செய்யவும், அதன் மூலம் மனித மாண்பு மற்றும் ஒருங்கிணைந்த மனித மேம்பாடு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் செயற்கை நுண்ணறிவுக்கான புதிய வத்திக்கான் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மே 3, ஞாயிறன்று, ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர் (Dicastery for Promoting Integral Human Development) கர்தினால் பிரீஃபெக்ட் அவர்களுடனான சந்திப்பின் போது, 'செயற்கை நுண்ணறிவுக்கான துறைகளுக்கு இடையேயான ஆணையம்' (Interdicasterial Commission on Artificial Intelligence) ஒன்றை அமைப்பதற்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஒப்புதல் அளித்தார்.

செயற்கை நுண்ணறிவின் (AI) அதிவேக வளர்ச்சி மற்றும் அதன் பரவலான பயன்பாடு, அது மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மனித மாண்பைப் பாதுகாப்பதிலும், ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டை உறுதி செய்வதிலும் திரு அவை கொண்டுள்ள உறுதியை இது பிரதிபலிக்கிறது.

இந்த ஆணையம், 'நற்செய்தி அறிவிப்பு' (Praedicate Evangelium) என்ற திருத்தூது அரசியலமைப்பின் 28 §5 பிரிவின் கீழ் நிறுவப்பட்டுள்ளது.

இந்த ஆணையத்தில் ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டுத் துறை, விசுவாசக் கோட்பாட்டுத் துறை, கல்வி மற்றும் கலாச்சாரத் துறை மற்றும் தொடர்புத் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் இணைந்து வாழ்வு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய துறைகளுக்கான திருத்தந்தை கழகங்களின் (Pontifical Academies) பிரதிநிதிகளும் இதில் உறுப்பினர்களாகச் செயல்படுகின்றனர்.

மேலும் ஆணையத்தின் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றத்திற்கும் திருத்தந்தையின் ஒப்புதல் அவசியமாகும். இதில் பங்கேற்கும் ஒவ்வொரு நிறுவனமும் ஒரு பிரதிநிதியை நியமிக்கும். இதன் ஒருங்கிணைப்புப் பொறுப்பு, ஆரம்பத்தில் புதுப்பிக்கத்தக்க ஓராண்டு காலத்திற்கு, ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டை ஊக்குவிக்கும் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது; அதன்பிறகு, திருத்தந்தை ஒவ்வோர் ஆண்டும் பங்கேற்கும் மற்றொரு நிறுவனத்திற்கு ஒருங்கிணைப்புப் பணியை ஒதுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒருங்கிணைப்பு அமைப்பானது, திருப்பீடத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் குறித்த ஒத்துழைப்பு, உரையாடல் மற்றும் தகவல் பகிர்வை ஊக்குவிக்கும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 மே 2026, 14:08