திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை

மீட்புப் பணியில் கன்னி மரியாவுக்கு வழங்கப்பட்டுள்ள தனித்துவமான இடத்தைப்பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நமக்கு தெளிவான போதனையை வழங்கியுள்ளது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மே 13  , புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தொடங்கினார்.

முதலில் திருத்தூதுப் பணிகள் நூலிலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.

பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள். ( திப 1: 13 -14 )

இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்.

அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்!

இன்று, மே 13 அன்று, பாத்திமா அன்னை மரியாவின் நினைவை நாம் கொண்டாடுகிறோம். இதே நாளில், 45 ஆண்டுகளுக்கு முன்பு, புனித பேதுரு சதுக்கத்தில் இடம்பெற்ற புதன் பொது மறைக்கல்வி உரையின் போது, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அன்னை மரியாவின் பாதுகாப்பினால் மட்டுமே அந்தத் தாக்குதலிலிருந்து அவர் உயிர் தப்பினார் என்பதை அவரே பலமுறை உறுதிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக, 'திருஅவையின் மாதிரியாக கன்னி மரியா' எனும் கருப்பொருளைக் கொண்ட இன்றைய மறைக்கல்வி உரையை, எனது புனிதமான முன்னோடிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். 'Totus Tuus' ( அனைத்தும் உங்களுடையது ) என்பதே அவரது தாரக மந்திரமாகும்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம், திருஅவை பற்றிய விசுவாசக் கோட்பாட்டு விளக்கத்தின் (Lumen gentium) இறுதி அதிகாரத்தை கன்னி மரியாவுக்கு அர்ப்பணிக்க விரும்பியது (காண்க.52-69). அவர் "திருஅவையின் மிகச்சிறந்த, முற்றிலும் தனித்துவமான உறுப்பினராகவும், நம்பிக்கை மற்றும் அன்புப்பணியில் திருஅவையின் முன்மாதிரியாகவும் மிகச்சிறந்த மாதிரியாகவும் அங்கீகரிக்கப்படுகிறார்" (எண். 53). இந்த வார்த்தைகள் அன்னை மரியாவை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்று நமக்கு அழைப்பு விடுக்கின்றன. தூய ஆவியாரின் செயல்பாட்டினால், மனித உருவில் வந்த இறைமகனை ஏற்றுக்கொண்டு அவருக்கு வாழ்வளித்த மரியாவினிடத்தில், ஒட்டுமொத்த திருஅவைக் கூட்டமைப்பின் மாதிரி, மிகச்சிறந்த உறுப்பினர் மற்றும் தாய் ஆகிய இரு நிலைகளையும் நாம் கண்டுகொள்ள முடியும்.

அருளின் செயல்பாட்டால் தன்னை வடிவமைத்துக் கொள்ள அனுமதித்ததாலும், அவரில் நிறைவேறிய உன்னத இறைவனின் கொடையைத் தனது நம்பிக்கையினாலும் கன்னிமையின் அன்பினாலும் வரவேற்றதாலும், ஒட்டுமொத்த திருஅவையும் எவ்வாறாக இருக்க அழைக்கப்படுகிறதோ அதற்கு மரியா ஒரு மிகச்சிறந்த மாதிரியாகத் திகழ்கிறார்: அதாவது, ஆண்டவருடைய வார்த்தையினால் உருவான ஒரு படைப்பாகவும், தூய ஆவியாரின் செயல்பாட்டிற்குப் பணிந்து நடப்பதன் மூலம் ஈன்றெடுக்கப்பட்ட இறைமக்களின் தாயாகவும் அவர் விளங்குகிறார். மேலும், நம்பிக்கையாளர்களுக்கெல்லாம் மேலானவராகத் திகழும் அன்னை மரியா, இறைமக்களின் புனிதமான ஒன்றிப்பிற்குள் இறைமறைபொருளை நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்வதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக நமக்கு வழங்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அவர் திருஅவைக் கூட்டமைப்பின் ஒரு உன்னதமான உறுப்பினராகத் திகழ்கிறார். "இறுதியாக, நம்மிடையே வந்த அன்பிற்குரிய இறைமகனின் வழியாக நம் அனைவரையும் பிள்ளைகளாகப் பெற்றெடுத்த அன்னை மரியா, ஒட்டுமொத்த திருஅவையின் தாயாகவும் விளங்குகிறார். எனவே, திருஅவையானது தன் விண்ணப்பங்கள் கேட்கப்படும், தான் பாதுகாக்கப்படும் மற்றும் அன்பு செய்யப்படும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன், ஒரு பிள்ளைக்குரிய உணர்வோடு அன்னை மரியாவை நோக்கித் திரும்ப முடியும்.

கன்னி மரியாவின் இந்த அனைத்துப் பண்புகளையும், அவரை 'மறைபொருளின் திருவுருவமாகத் திகழும் பெண்மணி' என்று அழைப்பதன் மூலம் வெளிப்படுத்தலாம். 'பெண்மணி' என்ற சொல், இஸ்ரயேலின் இளம் மகளாகத் திகழ்ந்த அவரது வரலாற்று எதார்த்தத்தை வலியுறுத்துகிறது; மெசியாவின் தாயாகும் அசாதாரண அனுபவம் இவருக்கே வழங்கப்பட்டது. 'திருவுருவம்' (icon) என்ற சொல், அவரில் கீழ்நோக்கிய மற்றும் மேல்நோக்கிய என இருவகை இயக்கங்கள் நிறைவேறியிருப்பதை வலியுறுத்துகிறது: அதாவது, எவ்விதப் பிரதிபலனும் எதிர்பாராத கடவுளின் மேலானத் தேர்வும், அவர் மீது மரியா கொண்டிருந்த சுதந்திரமான நம்பிக்கையின் வெளிப்பாடான சம்மதமும் அவரில் ஒருசேரப் பிரகாசிக்கின்றன. "எனவே, மரியா 'மறைபொருளின் திருவுருவமாகத் திகழும் பெண்மணி' ஆவார். அதாவது, ஒரு காலத்தில் மறைக்கப்பட்டிருந்ததும், இயேசு கிறிஸ்துவின் வழியாக முழுமையாக வெளிப்படுத்தப்பட்டதுமான இறைவனின் மீட்புத் திட்டத்தின் உருவமாக அவர் விளங்குகிறார்.

மீட்புப் பணியில் கன்னி மரியாவுக்கு வழங்கப்பட்டுள்ள தனித்துவமான இடத்தைப் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நமக்குத் தெளிவான போதனையை வழங்கியுள்ளது (காண்க.60-62). இயேசு கிறிஸ்து ஒருவரே மீட்பின் ஒரே பரிந்துரையாளர் (காண்க. 1 திமொ 2:5-6) என்பதையும், அவரது புனிதமிக்கத் தாய் "கிறிஸ்துவின் இந்த ஒப்பற்ற பரிந்துரைக்கும் தன்மைக்கு எந்த வகையிலும் தடையாகவோ அல்லது அதைக் குறைப்பதாகவோ அமையாமல், மாறாக அதன் வல்லமையையே எடுத்துக் காட்டுகிறார்" (LG, 60) என்பதையும் பொதுச்சங்கம் நினைவுபடுத்தியுள்ளது. அதே வேளையில், 'இறைவார்த்தை மனுவுருவாதல் திட்டத்தில், இறைவனின் தாயாக நித்திய காலத்திலிருந்தே முன் குறிக்கப்பட்ட கன்னி மரியா, கீழ்ப்படிதல், விசுவாசம், நம்பிக்கை மற்றும் எரியும் அன்பு ஆகியவற்றின் வழியாக மீட்பரின் பணியில் முற்றிலும் ஒரு சிறப்பு வழியில் ஒத்துழைத்தார். ஆன்மாக்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட வாழ்வை மீண்டும் அளிப்பதற்காக அவர் இதனைச் செய்தார். இக்காரணத்தினால், அருளின் வரிசையில் அவர் நமக்குத் தாயானார்' (LG, 61).

கன்னி மரியாவினிடத்தில் திருஅவையின் மறைபொருளும் பிரதிபலிக்கிறது: இறைமக்கள் தங்களுடைய பிறப்பிடம், மாதிரி மற்றும் தாயகம் ஆகியவற்றின் பிரதிபலிப்பை அவரிடம் காண்கின்றனர். திருஅவை ஆண்டவரின் தாயினிடத்தில் தனது சொந்த மறைபொருளைக் கண்டு தியானிக்கிறது. ஏனெனில், தான் அழைக்கப்பட்டுள்ள கன்னிமை கலவாத நம்பிக்கை, தாய்மைக்குரிய அன்பு மற்றும் மணவாட்டிக்குரிய உடன்படிக்கை ஆகியவற்றின் மாதிரியை அவரிடம் காண்பது மட்டுமல்லாமல், எல்லாவற்றிற்கும் மேலாக, தான் எவ்வாறாக மாற அழைக்கப்படுகிறதோ அதன் ஒரு முழுமையான முன்வடிவத்தை அவரிடம் திருஅவை அடையாளம் காண்கிறது.

மேற்கூறியவற்றிலிருந்து நாம் காண்பது போல, மக்களினங்களின் ஒளி ஏட்டில் தொகுக்கப்பட்டுள்ள அன்னை மரியாவைப் பற்றிய இந்தச் சிந்தனைகள், திருஅவை யை நேசிக்கவும், வரவிருக்கின்ற மற்றும் மாட்சியில் முழுமையடையப் போகின்ற இறையரசின் நிறைவுக்காகத் திருஅவைக்குள் பணி செய்யவும் நமக்குக் கற்றுக்கொடுக்கின்றன. எனவே, கன்னிமையையும் தாய்மையையும் ஒருங்கே கொண்ட மரியாள் என்னும் இந்த உன்னதமான மாதிரியால் நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம். அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி, நம்மிடம் எதிர்பார்க்கப்படுபவற்றிற்குப் பதிலளிக்க, அவரது பரிந்துரையின் வழியாக நமக்கு உதவுமாறு அவரிடம் வேண்டுவோம்:

  • திருஅவையைச் சார்ந்தவன்/ள் என்பதைத் தாழ்மையான மற்றும் துடிப்பான விசுவாசத்துடன் நான் வாழ்கிறேனா?
  • கடவுளின் அளவற்ற அன்பிற்குப் பதிலாக, அவர் எனக்கு அளித்த உடன்படிக்கையின் சமூகமாகத் திருஅவையை நான் அங்கீகரிக்கிறேனா?
  • கடவுளால் வழங்கப்பட்ட ஆயர்களுக்குப் பணிந்து நடப்பதன் மூலம், திருஅவையின் ஒரு வாழும் அங்கமாக என்னை நான் உணர்கிறேனா?
  • மரியாவைத் திருஅவையின் மாதிரி, மிகச்சிறந்த உறுப்பினர் மற்றும் தாயாக நான் பார்க்கிறேனா? மேலும், அவருடைய மகனின் உண்மையான சீடனாகத் திகழ எனக்கு உதவுமாறு அவரிடம் வேண்டுகிறேனா?

"சகோதர சகோதரிகளே, அன்னை மரியாவின் மீது இறங்கி வந்த தூய ஆவியாரை நாம் தாழ்மையுடனும் நம்பிக்கையுடனும் அழைக்கிறோம்; அவரே இந்த உன்னதமான உண்மைகளை நாம் நம் வாழ்வில் முழுமையாகக் கடைப்பிடிக்கத் தேவையான அருளை நமக்கு வழங்குவாராக."

மக்களினங்களின் ஒளி எனும் விசுவாசக் கோட்பாட்டு விளக்கத்தைப் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்திய பிறகு, அன்னை மரியாவிடம் இந்தப் வரத்தைப் பெற்றுத் தருமாறு நாம் கேட்போம்: நம் அனைவரிடமும் புனிதத் திருஅவையின் மீதான அன்பு மென்மேலும் வளர வேண்டும். ஆமென்!

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை திருத்தந்தை நிறைவு செய்தார். இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது திருத்தூது ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 மே 2026, 13:41