வயது முதிர்ந்த அருள்பணியாளருக்கு உதவிய‌ திருத்தந்தை

திருதந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரையின் முடிவில் திருத்தந்தையைச் சந்திக்கச் சென்றபோது ஏற்கனவே வெயிலில் ஏறத்தாழ மூன்று மணி நேரம் நின்றிருந்த அருள்பணி டியேகோ திடீரென மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட திருத்தந்தை அவர்கள், உடனடியாக மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்று, அந்த அருள்பணியாளருக்கு அருகில் முழங்காலிட்டு அவருக்கு உதவி செய்த நிகழ்வு அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

மே 27, புதன்கிழமையன்று புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இடம்பெற்ற புதன் பொது மறைக்கல்வி உரையின்போது, கடுமையான வெப்பத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த அருள்பணியாளர் ஒருவருக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தாமே சென்று உதவியது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

தெற்கு இத்தாலியின் புக்லியா பகுதியில் உள்ள மார்டினா பிராங்காவைச் சேர்ந்த அருள்பணி டியேகோ செமராடோ அவர்கள், தனது சகோதரரான அருள்பணி பிராங்கோ செமராடோவின் குருத்துவ அருள்பொழிவின் 60-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக அவருடன் உரோம் நகருக்கு வந்திருந்தார்.

திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரையின் முடிவில் திருத்தந்தையைச் சந்திக்கச் சென்றபோது ஏற்கனவே வெயிலில் ஏறத்தாழ மூன்று மணி நேரம் நின்றிருந்த அருள்பணி டியேகோ திடீரென மயங்கி விழுந்தார்.

இதனைக் கண்ட திருத்தந்தை அவர்கள், உடனடியாக மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்று, அந்த அருள்பணியாளருக்கு அருகில் முழங்காலிட்டு அவருக்கு உதவி செய்த நிகழ்வு அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அப்போது உடனிருந்த அருள்பணி பிராங்கோ, "இந்த நிகழ்வின் போது திருத்தந்தை தன் அருகிலிருப்பதை கண்ட அருள்பணி டியேகோ அவர்கள் ஆச்சரியமடைந்து, புனிதத் தந்தையே, இது நீங்கள்தானா? என்று கேட்டதாகவும், பின்னர் திருத்தந்தை அவரது கையை குலுக்கி, அவருக்கு ஒரு செபமாலையை பரிசாக வழங்கியதாகவும்" கூறியுள்ளார்.

பிறகு அருள்பணி டியேகோ அவர்கள் வத்திக்கானின் உடனடி சிகிச்சை  மையத்திற்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர் நலமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் மதிய உணவு அருந்தி திருப்பலியை நிறைவேற்றினார்.

அருள்பணி டியேகோ கடந்த 1970-ஆம் ஆண்டு புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 மே 2026, 11:41