நம்பிக்கையின் தூதுவர் கர்தினால் செரிக்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
லாசரஸின் நற்செய்தி நிகழ்வு, மரணம் என்பது ஒரு முடிவல்ல, அது நித்திய வாழ்விற்கான ஒரு பயணம் என்றும், நம்பிக்கை, சேவை மற்றும் பிறரன்பு ஆகியவற்றின் மூலம், துன்பங்கள் நிறைந்த இவ்வுலகில் நம்பிக்கையின் சாட்சிகளாகத் திகழ கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
மே 15, வெள்ளியன்று , வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் இடம் பெற்ற கர்தினால் பவுல் எமில் செரிக் (Cardinal Paul Emil Tscherrig) அவர்களின் இறுதிச் சடங்கு திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் இவ்வாறு திருத்தந்தை கூறினார்.
தசாப்தங்களாக, கர்தினால் செரிக் அவர்கள் திருத்தூதரகப் பணிகள் மற்றும் செயலகப் பணிகளின் வழியாகப் திருப்பீடத்திற்கு தன்னை அர்ப்பணித்தார் என்றும் , அவர் தனது பொறுப்புகளைத் தாழ்மை, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் செய்தார் என்றும் திருத்தந்தை எடுத்துக்காட்டினார்.
மேலும் ஒரு போதகராகவும் தூதரக அதிகாரியாகவும் (diplomat), கார்டினல் செரிக் மக்களிடையேயும் திருஅவை களுக்கிடையேயும் ஒற்றுமை, அமைதி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்தார் என்றும், சூழலுக்கு ஏற்ப வாழும் பண்பையும், ஆன்மீகப் பராமரிப்பையும், உரையாடல் மற்றும் நட்புறவில் மிகுந்த ஈடுபாட்டையும் அவர் காட்டினார் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
கர்தினால் செரிக் அவர்களின் பணிகள் அவரை புருண்டி, கரீபியன் நாடுகள், தென் கொரியா, மங்கோலியா, ஸ்காண்டிநேவியா, அர்ஜென்டினா, இத்தாலி மற்றும் சான் மரினோ ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றன என்று குறிப்பிட்ட திருத்தந்தை, சென்ற இடமெல்லாம், அவர் உள்ளூர் திருஅவைகளுக்கும் திருத்தூதரக பீடத்திற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தினார் என்றும் கூறினார்.
கிறிஸ்தவ நம்பிக்கை என்பது உலகியல் வெற்றிகளில் அடங்கியிருக்கவில்லை, மாறாக கிறிஸ்துவின் உயிர்ப்பிலேயே அது வேரூன்றி உள்ளது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி, மனிதகுலம் நம்பிக்கை மற்றும் ஒருமைப்பாட்டை மீண்டும் கண்டறிய உதவக்கூடிய "நம்பிக்கையின் தூதுவர்களின்" தேவையை இந்த மறையுரை நினைவூட்டுகிறது என்றும் கூறினார்.
இறுதியாக, கர்தினால் செரிக் அவர்களின் தாரக மந்திரமான கிறிஸ்துவே எனது நம்பிக்கை (Spes mea Christus) என்பது அவரது நம்பிக்கையின் ஆணிவேராக அமைந்தது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, கடவுளின் பேரன்பில் நிலைத்திருந்த அந்த நம்பிக்கை, அவரது வாழ்நாள் பயணம் முழுவதும் அவருக்கு ஊக்கமளித்தது என்றும், இன்று அது கிறிஸ்துவிடம் நிலைவாழ்வின் நிறைவைப் பெறுகிறது என்றும் கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
