உலக அமைதிக்காக மே 30-ல் திருத்தந்தை தலைமையில் சிறப்பு ஜெபமாலை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வணக்க மாதத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில், மே 30, சனிக்கிழமையன்று மாலை 7:00 மணிக்கு வத்திக்கான் தோட்டத்திலுள்ள லூர்தன்னை குகையில் நடைபெறும் புனித ஜெபமாலை வழிபாட்டிற்குத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தலைமை தாங்குவார். தனது திருத்தந்தை பணிக்காலம் தொடங்கியதிலிருந்தே உலக அமைதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திருத்தந்தை, போர் மற்றும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இடைவிடாது செபிக்குமாறு நம்பிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார்.
இந்த ஜெபமாலை வழிபாட்டில் உலகெங்கிலும் உள்ள மக்களும், அன்னை மரியாள் திருத்தலங்களும் ஆன்மீக ரீதியாக ஒன்றிணையுமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன், பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, பிரான்ஸ், லெபனோன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள பல முக்கிய திருத்தலங்கள் இந்த கூட்டு வழிபாட்டில் தங்களின் பங்கேற்பை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த வழிபாட்டின் போது, திருத்தந்தை அவர்கள் ஜெபமாலையின் 'மகிழ்ச்சி மறைஉண்மைகளைத்' தியானித்து ஜெபிப்பார். ஜெபமாலையின் ஒவ்வொரு பத்து மணிகளும் போர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டுத் துயரப்படுபவர்களுக்காகவே அர்ப்பணிக்கப்படும்.
போரினால் பாதிக்கப்பட்டவர்கள், மக்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் வழங்குபவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மனிதாபிமான உதவி செய்பவர்கள், சிறைக்கைதிகள் மற்றும் அவமதிப்புகளை எதிர்கொள்பவர்கள் ஆகியோருக்காகவும், இறுதியாகப் போர் முடிவுக்கு வந்து உலகம் முழுவதும் நிலையான அமைதி நிலவ வேண்டும் என்ற நோக்கங்களுக்காகவும் இந்த ஜெபமாலையில் இறைவேண்டல்கள் ஏறெடுக்கப்படும்.
உரோம் நகரில் கூடியிருக்கும் திருப்பயணிகளும் நம்பிக்கையாளர்களும் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய திரைகள் வழியாக இந்த ஜெபமாலை வழிபாட்டில் பங்கேற்கலாம். இந்த ஆன்மீக முயற்சியை நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
