புனித இரண்டாம் ஜான் பால் நினைவிடத்தில் திருத்தந்தை லியோ: அமைதிக்கான மன்றாட்டு

1981-இல் புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி நடந்து 45 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, மே 13, புதனன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்திலுள்ள அந்த நினைவுப் பகுதியில் முழங்காலிட்டு இறைவேண்டல் செய்தார்.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

இந்த ஆண்டு மே 13, புதனன்று இடம்பெற்ற பொது மறைக்கல்வி உரைக்கு முன்பாக, 1981 மே 13-இல் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் மீதான கொலை முயற்சி நடந்த அதே இடத்தில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சிறிது நேரம் நின்று முழங்காலிட்டு இறைவேண்டல் செய்தார். புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் உள்ள அந்த இடம், போலந்து நாட்டைச் சேர்ந்த அந்தத் திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ இலச்சினை (Coat of Arms) பொறிக்கப்பட்ட ஒரு வெள்ளை நிற பளிங்குப் பலகையினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

பாத்திமா அன்னையின் திருவிழாவை நினைவுகூர்ந்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் மீதான தாக்குதல் நடந்து நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், அன்றைய தனது மறைக்கல்வி உரையை அன்னை மரியாளுக்கு அர்ப்பணிப்பதாக குறிப்பிட்டார்.

போர்த்துகீசிய மொழி பேசும் திருப்பயணிகளிடம் உரையாற்றிய திருத்தந்தை, அமைதியின் செய்தியை அன்னை மரியா மூன்று இடையர் சிறுவர்களிடம் ஒப்படைத்த பாத்திமா திருத்தலத்தை நோக்கித் தங்கள் பார்வையைத் திருப்புமாறு நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆறுதல், ஒற்றுமை மற்றும் நம்பிக்கைக்கான மனிதகுலத்தின் ஏக்கத்தின் அடையாளமாக, உலகம் முழுவதிலுமிருந்து திருப்பயணிகள் அங்கு கூடுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, திருத்தந்தை, போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்காகவும், குறிப்பாக உலக அமைதிக்காகவும் அன்னை மரியாவின் மாசற்ற இதயத்திடம் (Immaculate Heart of Mary) ஒப்படைத்து இறைவேண்டல் செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 மே 2026, 10:50