திருத்தந்தையின் அசெர்ரா நகருக்கான மேய்ப்புப்பணி பயணத்தின் நிகழ்வுகள் !

நாம் ஒருபோதும் நம்பிக்கையற்ற நிலைக்குத் தள்ளப்படக் கூடாது; விசுவாசமும் நீதியும் இணைந்து இந்தப் பூமியை மீண்டும் புதுப்பிக்கும்.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

மே 23, சனிக்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் இத்தாலியின் காம்பானியா மாநிலத்திலுள்ள நெருப்பு நிலம் (Land of Fires) என்று அழைக்கப்படும்  அசெர்ரா நகருக்கு மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின் ஒரு நிகழ்வாக அசெர்ரா பேராலயத்தில் ஆயர்கள், அருள் பணியாளர்கள் மற்றும் துறவறத்தார் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து உரையாடினார்.

எனது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,

பொம்பெயி மற்றும் நேப்பிள்ஸ் நகரங்களுக்கு நான் பயணம் மேற்கொண்ட சில நாட்களிலேயே, மீண்டும் காம்பானியாவில் உங்களோடு இருக்க அனுமதித்ததற்காக நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். 'நெருப்பு நிலம்' (Land of Fires) என்று வருத்தத்துடன் அழைக்கப்படும் இந்தப் பகுதிக்கு வர திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் வர விரும்பினார், ஆனால் அவரால் அது இயலாமல் போனது. இன்று, அவரது விருப்பத்தையும், நமது பொதுவான இல்லத்தைப் பராமரிக்கவும், ஏழைகள் மற்றும் படைப்பின் கதறலுக்குச் செவிசாய்க்கவும் நம்மை அழைக்கின்ற 'இறைவா உமக்கே  புகழ் (Laudato si') என்ற அவரது செய்தியையும் நாம் முன் எடுத்துச் செல்கிறோம்.

பேராசை, ஊழல் மற்றும் குற்றச் செயல்களால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்கவே நான் முதன்முதலில் இங்கு வந்திருக்கிறேன். உங்கள் வலியையும் கண்ணீரையும் நான் பகிர்ந்து கொள்கிறேன். அதே நேரத்தில், உண்மை, நீதி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைப் துணிச்சலுடன் பாதுகாத்து வரும் இந்தப் பகுதித் திருஅவை க்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் உலர்ந்த எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கைப் பற்றிப் பேசுகிறார். காயப்பட்டுக் கிடக்கும் இந்த நிலத்தைப் பார்க்கும்போது, நாமும் சில நேரங்களில் அதே போன்ற துயரத்தையும் நம்பிக்கையற்ற நிலையையும் உணரக்கூடும். ஒரு காலத்தில் இந்தப் பகுதி அதன் அழகு, வளமான மண் மற்றும் செழிப்பான வாழ்விற்காகப் பெயர் பெற்றிருந்தது. ஆனால் இன்றோ, சுற்றுச்சூழல் அழிவு மற்றும் அலட்சியத்தால் ஏற்பட்ட ஆழமான வடுக்களை இது சுமந்து நிற்கிறது. இருப்பினும், அன்று இறைவாக்கினர் எசேக்கியேலிடம் கேட்டது போலவே கடவுள் நம்மிடம் கேட்கிறார்: ‘இந்த உலர் எலும்புகள் மீண்டும் உயிர் பெற முடியுமா?’ அதற்கு நாம், ஆண்டவரே, அது உமக்குத் தெரியும் என்று நம்பிக்கையோடு பதிலளிக்கிறோம்.

அன்பு நண்பர்களே, நாம் ஒருபோதும் நம்பிக்கையின்மைக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. மரணம் வென்றுவிட்டதாகத் தோன்றும் இடத்திலும் கடவுளால் மீண்டும் வாழ்வைக் கொடுக்க முடியும். தூய ஆவியானவர் இதயங்களைப் புதுப்பிக்கவும், சமூகங்களைக் குணப்படுத்தவும், சமுதாயத்தில் பொறுப்புணர்வை விழிப்படையச் செய்யவும் வல்லவர்.

நம்பிக்கையிலும், நீதியிலும், படைப்பின் மீதான அக்கறையிலும் நீங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். "தூய ஆவியானவர் இந்த நிலத்தை நலமாக்கி, வருங்காலத் தலைமுறைக்கு விடியலைத் தரும் ஓர் அமைதிப் படையை எழுப்புவாராக!"

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 மே 2026, 14:56