திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் அயர்லாந்து அரசுத் தலைவரைச் சந்தித்தார். திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் அயர்லாந்து அரசுத் தலைவரைச் சந்தித்தார்.  (@VATICAN MEDIA)

அயர்லாந்து அரசுத் தலைவருடன் திருத்தந்தை சந்திப்பு!

அயர்லாந்தின் சமூக-பொருளாதார நிலை, அங்குள்ள கத்தோலிக்கத் திருஅவைக்கும் அரசுக்கும் இடையிலான உறவு, மற்றும் முக்கியமாக கல்வித் துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மே 22, வெள்ளியன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அயர்லாந்து அரசுத் தலைவர்  (Taoiseach)  மைக்கேல் மார்ட்டின் அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

திருத்தந்தையுடனான இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, மார்ட்டின் அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் மற்றும் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் இருவரையும் சந்தித்து உரையாடினார்.

மேலும் இச்சந்திப்பின்போது, திருப்பீடத்திற்கும் அயர்லாந்திற்கும் இடையே நிலவும் நல்லுறவு குறித்து இரு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, அயர்லாந்தின் சமூக பொருளாதாரச் சூழல் குறித்தும், அங்குள்ள கத்தோலிக்கத் திருஅவைக்கும் அரசுக்கும் இடையிலான உறவு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்றும், குறிப்பாக, கல்வித் துறை தொடர்பான செயல்பாடுகள் குறித்து இச்சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது என்றும் அச்செய்திக்குறிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும்  அனைத்துலக அரசியல் விவகாரங்கள் குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது என்றும், இப்பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவதற்கான வழிகள் குறித்தும், உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும் பன்னாட்டுக் கொள்கை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 மே 2026, 07:30