திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், அர்மீனிய அப்போஸ்தலிக் திருச்சபையின் தலைவர் முதலாம் அராம் அவர்களைச் சந்தித்து உரையாடியபோது திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், அர்மீனிய அப்போஸ்தலிக் திருச்சபையின் தலைவர் முதலாம் அராம் அவர்களைச் சந்தித்து உரையாடியபோது  (@Vatican Media)

நம்பிக்கையே ஒன்றிப்பின் திறவுகோல்: திருத்தந்தை - அர்மீனிய கத்தோலிக்கோஸ் வரலாற்றுச் சந்திப்பு!

அர்மீனிய அப்போஸ்தலிக் திருச்சபையின் தலைவர் முதலாம் அராம், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பில், நம்பிக்கையில் ஒற்றுமை இருந்தால் மட்டுமே திருச்சபைகளுக்கு இடையே முழுமையான ஐக்கியத்தை எட்ட முடியும் எனத் திருத்தந்தை வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

நம்பிக்கையில் ஒருமைப்பாடு நிலவாமல், நம் திருஅவைகளுக்கு இடையிலான முழுமையான ஐக்கியத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாது என்று திருத்தந்தை பதினான்காம் லியோஅவர்கள் வலியுறுத்தினார்.

மே 18, திங்களன்று, அர்மீனிய அப்போஸ்தலிக் திருஅவையின் சிலிசியா பீடத்தின் (See of Cilicia) தலைவரான முதலாம் அராம் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு திருத்தந்தை மொழிந்தார்.

இந்தச் சந்திப்பின் போது, கத்தோலிக்கத் திருஅவைக்கும் கிழக்கத்திய மரபுவழித் திருஅவைகளுக்கும் இடையிலான கிறிஸ்தவ ஒற்றுமை, பகிரப்பட்ட நம்பிக்கை மற்றும் தொடர்ச்சியான இறையியல் உரையாடல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை திருத்தந்தை வலியுறுத்தினார்.

தொடர்ந்து கிறிஸ்தவ ஒன்றிப்பு உறவுகளில் கத்தோலிக்கோஸ் முதலாம் அராம் அவர்கள் காட்டிவரும் அர்ப்பணிப்புக்கு நன்றியை  தெரிவித்த திருத்தந்தை, 2003-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இறையியல் உரையாடலுக்கான அனைத்துலக கூட்டுக் குழுவின் (Joint International Commission for Theological Dialogue) பணிகள், புதிய வீரியத்துடன் தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் வெவ்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையேயான சகவாழ்வின் முன்மாதிரி என்று லெபனோனைப் போற்றிய திருத்தந்தை, 1930-ஆம் ஆண்டு முதல் கத்தோலிக்கோஸ் தலைமையகம் அமைந்துள்ள லெபனோன் நாட்டின் சிக்கலான சூழ்நிலை குறித்து தனது கவலையை தெரிவித்ததுடன், அந்நாட்டின் மீதும், மத்திய கிழக்கு நாடுகளின் திருஅவைகள் மீதும் இருக்கும் அக்கறையை வெளிப்படுத்தினார்.

திருத்தந்தை அவர்களும், முதலாம் அராம் அவர்களும்  இணைந்து கிறிஸ்தவ ஒற்றுமைக்காகவும், நிலையான அமைதிக்காகவும், உலகம் முழுவதும் ஏற்பட வேண்டிய மறுமலர்ச்சிக்காகவும் இறைவேண்டல் செய்தனர்.

சிலிசியா பீடத்தின் தலைவரான முதலாம் அராம் அவர்கள், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களை சந்திக்கும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும். அவர்களின் தனிப்பட்ட சந்திப்பைத் தொடர்ந்து, அங்குள்ள  எட்டாம் அர்பன் (Urban VIII) சிற்றாலயத்தில் ஒரு இறைவேண்டல் வழிபாடு நடைபெற்றது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 மே 2026, 11:23