அதிகாரத்தைத் திணிக்காமல் நல்லுறவோடு வழிகாட்ட திருஅவை இயக்கங்களுக்குத் திருத்தந்தை அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
தலைமைத்துவம் என்பது சமூகங்களை வளர்ச்சி மற்றும் நல்லுறவை நோக்கி வழிநடத்த வேண்டுமே தவிர, தனிப்பட்ட நலன்களை நோக்கியதாக இருக்கக்கூடாது என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
மே 21, வியாழனன்று, திருஅவை இயக்கங்கள் மற்றும் பொதுநிலையினர் அமைப்புகளின் தலைவர்களை புதிய ஆயர்கள் மன்ற அரங்கில் சந்தித்தபோது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.
திருஅவையின் நிர்வாக முக்கியத்துவம் குறித்துப் பேசிய திருத்தந்தை, தலைமைத்துவம் என்பது வெறும் நிர்வாகம் சார்ந்த ஒன்று மட்டுமல்ல, அது கடவுளின் மீட்புப் பணியைப் பிரதிபலிக்கும் ஒரு ஆன்மீகப் பணி என்றும், அதிகாரம் என்பது ஒருபோதும் திணிக்கப்படக் கூடாது, மாறாக அது சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் பொதுநிலையினர் அமைப்புகளின் தலைவர்கள் அவர்களது சமூகங்களால் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்படுவதால், இந்த நிர்வாகமானது பணிவு, வெளிப்படைத்தன்மை, கூட்டுப் பொறுப்புணர்வு, ஒருவரையொருவர் மதித்து செயல்படுதல் மற்றும் ஆயர்களுடனான நல்லுறவில் இறைவிருப்பத்தை நாடித் தேடுதல் ஆகியவற்றுடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
திருஅவை இயக்கங்களின் இறைவாக்குப் பணியை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, நவீன காலத்தின் ஆன்மீகப் பணி சார்ந்த சவால்களுக்குப் பதிலளிக்கவும், தங்கள் அமைப்புகளின் எல்லைகளைத் தாண்டிச் சென்று, இன்றைய சமூகத்திற்கும் பண்பாட்டிற்கும் நற்செய்தியை அறிவிக்க முன்வருமாறு அவர்களுக்குத் திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
அதே சமயம், தங்கள் அமைப்பின் ஆன்மீகக் கொடை மட்டுமே உண்மையானது என்று தற்பெருமை கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்த திருத்தந்தை, அனைத்து இயக்கங்களும் உலகளாவிய திருஅவையோடும், உள்ளூர் ஆயர்களோடும் எப்போதும் இணைந்தே செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இறுதியாக, அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவர்களையும், திறம்பட நற்செய்தி அறிவிப்பவர்களையும் உருவாக்குவதற்காகப் பொதுநிலையினர் அமைப்புகளை பாராட்டிய திருத்தந்தை, தங்களுக்குரிய ஆன்மீகக் கொடைகளைத் திறந்த மனதோடும், சுயநலமற்ற அன்போடும், திருஅவைக்குரிய நம்பிக்கையோடும் பாதுகாத்து வளர்க்குமாறு வேண்டுகோள் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
