பிறரன்பே இறையன்பின் சான்று
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
பிறர் மீது நாம் காட்டும் அன்பே, இறைவனிடம் நாம் கொண்டுள்ள அன்பின் உண்மையான சான்று என்றும், நிதி சார்ந்த மற்றும் பொருள் உதவிகளுக்கு அப்பாற்பட்டு, துடிப்புள்ள கத்தோலிக்க சமூகங்கள் ஆன்மீக நம்பிக்கையை வழங்குவதோடு, எதிர்கால குருத்துவ மற்றும் துறவற அழைத்தல்களை ஊக்குவிக்கின்றன என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
மே 18, திங்களன்று, கத்தோலிக்க விரிவாக்கக் சங்கத்தின் ஆளுநர் குழு உறுப்பினர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, ஏழ்மையான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட கத்தோலிக்க சமூகங்களுக்கு அவர்கள் ஆற்றி வரும் மறைபரப்புப் பணிக்காக தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
திருத்தூதர் பணிகள் நூலை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, தூய ஆவியால் வலுப்படுத்தப்பட்ட ஆரம்பகால கிறிஸ்தவர்கள், எவ்வாறு நற்செய்தியை அறிவித்தார்கள் என்றும், இறைவேண்டல், சகோதரத்துவம் மற்றும் நற்கருணை ஆகியவற்றை மையமாகக் கொண்ட சமூகங்களை எவ்விதம் கட்டியெழுப்பினார்கள் என்றும் எடுத்துக்காட்டினார்.
மேலும் அமெரிக்கா முழுவதும் உள்ள தொலைதூர மற்றும் நிதி ரீதியாகப் பின்தங்கிய மறைமாவட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, 1905-ஆம் ஆண்டில் கத்தோலிக்க விரிவாக்கச் சங்கத்தை நிறுவிய தந்தை பிரான்சிஸ் கிளமெண்ட் கெல்லி அவர்களுக்கு இதே மறைபரப்பு உணர்வுதான் ஊக்கமளித்தது என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
குறைந்த வசதிகள் கொண்ட சமூகங்களில், குறிப்பாகக் கியூபா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ ஆகிய இடங்களில் அந்தச் சங்கம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான பணிகளை பாராட்டிய திருத்தந்தை, இதனைத் திருஅவையின் அனைத்துலகத் தன்மையின் அடையாளம் என்று விவரித்தார்.
இறுதியாக, அமெரிக்காவில் உள்ள பின்தங்கிய மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த குடும்பங்களுக்குத் தொடர்ந்து உதவி செய்யுமாறு அவர்களைக் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, "கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்பதை மக்கள் தங்கள் இதயத்தில் உணரக்கூடிய அன்பான சூழலை உருவாக்குவது அவசியம் என்று வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
