கர்தினால் செரிக் அவர்களின் மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்!
ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்
"இத்தாலி மற்றும் சான் மரினோ நாடுகளுக்கான முன்னாள் திருத்தூது தூதராக (Apostolic Nuncio) பணியாற்றிய சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கர்தினால் பால் எமில் செரிக் அவர்கள், மே 12, செவ்வாயன்று தனது 79-வது வயதில் இறைபதம் அடைந்தார். அவரது மறைவுக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், தனது "ஆழ்ந்த இரங்கலை" தெரிவித்துள்ளார்.
மறைந்த கர்தினால் அவர்களின் குடும்பத்தாருக்கும், அவர் சார்ந்த சீயோன் (Sion) மறைமாவட்டத்திற்கும் அனுப்பியுள்ள தந்திச் செய்தியில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள திருத்தந்தை, கர்தினால் செரிக் அவர்கள் திருஅவைக்கும், திருப்பீடத் திற்கும் ஆற்றிய "பற்றுறுதி மிக்கப் பணிகளை" பாராட்டினார்.
பல நாடுகளில் திருத்தந்தையின் பிரதிநிதியாகவும், பின்னர் வத்திக்கானின் பல்வேறு துறைகளில் (dicasteries) உறுப்பினராகவும் மறைந்த கர்தினால் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்கப் பணிகளை திருத்தந்தை குறிப்பிட்டார்.
திருத்தந்தை லியோ அவர்கள், திருஅவை மீதும் பேதுருவின் வழித்தோன்றல் மீதும் கர்தினால் கொண்டிருந்த தாராள மனப்பான்மையுடனான அன்புச் சாட்சியத்தை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, ஆண்டவர் அவரை "மறைவே இல்லாத நித்திய ஒளியில்" (light that knows no sunset) வரவேற்க வேண்டுமென்று இறைவேண்டல் செய்தார்.
1947-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் உன்டெரெம்ஸ் (Unterems) பகுதியில் பிறந்த கர்தினால் செரிக் அவர்கள், 1974-இல் குருவாகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். 1978-ஆம் ஆண்டு வத்திக்கான் தூதரகப் பணியில் இணைந்த அவர், பல தசாப்தங்களாக ஆப்பிரிக்கா, ஆசியா, கரீபியன், ஐரோப்பா மற்றும் இலத்தீன் அமெரிக்கா எனப் பல்வேறு நாடுகளில் பணியாற்றினார். 2017 முதல் 2024 வரை இத்தாலி மற்றும் சான் மரினோவிற்கான திருத்தூது தூதராக பணியாற்றிய அவர், அந்தப் பொறுப்பை வகித்த முதல் இத்தாலியர் அல்லாதவர் என்ற பெருமையைப் பெற்றார். 2023-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவரை கர்தினாலாக உயர்த்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
