குடும்பங்கள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
மக்கள் தொகையியல் சார்ந்த பிரச்சினைகள் வெறும் புள்ளிவிவரங்கள் (Statistics) மட்டுமல்ல; அவை சமூகத்தின் எதிர்காலமாக விளங்கும் உண்மையான குடும்பங்கள், பெற்றோர் மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடையவை என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.
மே 25, திங்களன்று, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மக்கள் தொகையியல் ஆய்வுக்குழு (Demography Intergroup) உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, ஐரோப்பாவில் தீவிரமடைந்து வரும் மக்கள் தொகை நெருக்கடி குறித்தும், குடும்பங்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஆதரவளிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கவலைகளை மீண்டும் வெளிப்படுத்திய திருத்தந்தை, பிறப்பு விகிதக் குறைவு, தனிமை மற்றும் தலைமுறைகளுக்கு இடையேயான ஒருமைப்பாடு பலவீனமடைதல் போன்ற சவால்களை எதிர்கொண்டு வரும் ஐரோப்பாவை 'முதுமையடைந்து வரும் ஒரு கண்டம்' (Aging continent) என்று வர்ணித்தார்.
மேலும் ஐரோப்பாவின் கிறிஸ்தவ வேர்களை நிராகரிப்பது அதன் கலாச்சார மற்றும் சமூக மலட்டுத்தன்மைக்கு (Sterility) வழிவகுத்துள்ளதாக எச்சரித்த திருத்தந்தை, குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறிக்கொண்டு, அதே வேளையில் தாய்மை, கருக்கலைப்பு ஆகியவற்றிற்கு சாதகமாக செயல்பட்டு, குடும்பங்களைக் கட்டியெழுப்பும் விருப்பத்தையே சிதைக்கும் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்தார்.
ஒவ்வொரு மனிதனின் மாண்பையும் வலியுறுத்திய திருத்தந்தை, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் போதனைகளை மேற்கோள்காட்டி, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தின் மூலம் உருவாகும் குடும்பமே 'சமூக வாழ்க்கையின் முதல் மற்றும் மாற்றீடு செய்ய முடியாத பள்ளி' என்று மீண்டும் வலியுறுத்தினார்.
குடும்பங்களுக்கு உண்மையான ஆதரவை வழங்கவும், மனித மாண்பைப் பாதுகாக்கவும், பொதுநலனை மேம்படுத்தவும் தகுந்த கொள்கைகளை உருவாக்குவதற்கு அரசுகள், குடிமைச் சமூகம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று திருத்தந்தை அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
இறுதியாக, குடும்பங்கள் மீதான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பானது ஐரோப்பாவின் மக்கள் தொகையியல் குளிர்காலத்தை (Demographic winter) வென்று, எதிர்கால சந்ததியினருக்கும் குடும்பங்களுக்கும் ஒரு புதிய 'வசந்த காலத்தை' (Springtime) உருவாக்கும் என்ற தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி திருத்தந்தை தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
