திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
மே 20 , புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தொடங்கினார். ‘மக்களினங்களின் ஒளி' என்ற திருஅவைப் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் முதல் ஆவணமான, திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் (Sacrosanctum Concilium) என்ற தலைப்பு குறித்து தனது சிந்தனைகளை திருப்பயணிகளுடன் திருத்தந்தை பகிர்ந்துகொண்டார்.
முதலில் திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.
அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள். (எபேசியர் 1: 9 - 10)
இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்.
அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்!
இந்தக் கோட்பாட்டை உருவாக்கியதில், பொதுச்சங்க தந்தையர்கள் சடங்கு முறைகளைச் சீர்திருத்துவதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை; மாறாக, திருஅவையை உருவாக்கி ஒன்றிணைக்கும் உயிருள்ள பிணைப்பான கிறிஸ்துவின் மறைபொருளை திருஅவை உற்றுநோக்கவும், ஆழமாகப் புரிந்துகொள்ளவும் வழிநடத்த விரும்பினர். உண்மையில், திருவழிபாடு என்பது இந்த மறைபொருளின் இதயத்துடிப்பைத் தொடுவதாகும். இதுவே திருஅவை கிறிஸ்துவிடமிருந்து தன் வாழ்வைப் பெற்றுக்கொள்ளும் இடமாகவும், காலமாகவும், களமாகவும் அமைகிறது. திருவழிபாட்டில்தான் "நமது மீட்பின் பணி நிறைவேற்றப்படுகிறது" (SC, 2); இதுவே நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள் (காண்க . 1 பேதுரு 2:9) என மாற்றியமைக்கிறது.
இருபதாம் நூற்றாண்டில் திருஅவை கண்ட விவிலியம், திருஅவை மரபு மற்றும் திருவழிபாடு ஆகிய மூன்று தளங்களிலான புதுப்பித்தல் சுட்டிக்காட்டுவது போல, இந்த ‘மறைபொருள்’ என்பது ஏதோ ஒரு மர்மமான விடயம் அல்ல; மாறாக, புனித பவுல் கூறுவது போல (காண்க. எபேசியர் 3:3-6), காலங்காலமாக மறைந்திருந்து கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் மீட்புத் திட்டமாகும். எனவே, திருவழிபாட்டில் அருட்சாதன முறைப்படி நமக்கு வெளிப்படுத்தப்படும் கிறிஸ்துவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு மற்றும் மாட்சிமைப்படுத்தப்படுதல் ஆகிய பாஸ்கா நிகழ்வே ‘கிறிஸ்தவ மறைபொருள்’ ஆகும். ஆகையால், நாம் எப்போதெல்லாம் “அவரது பெயரால்” (மத்தேயு 18:20) கூடுகிறோமோ, அப்போதெல்லாம் இந்த மறைபொருளின் ஆழத்திற்குள் நாம் அழைத்துச் செல்லப்படுகிறோம்.
கிறிஸ்துவே திருஅவை எனும் மறைபொருளின் உள்ளார்ந்த இயக்குசக்தி; சிலுவையில் அவரது திறக்கப்பட்ட விலாவிலிருந்து உருவான கடவுளின் தூய மக்களே இத்திருஅவை . புனித திருவழிபாட்டில், அவர் தமது தூய ஆவியின் வல்லமையால் இன்றும் தொடர்ந்து செயலாற்றுகிறார். அவர் தமது மணவாட்டியாகிய திருஅவையைப் புனிதப்படுத்தி, தந்தையாம் இறைவனுக்குத் தாம் ஒப்புக்கொடுக்கும் பலியில் அவளையும் இணைத்துக்கொள்கிறார். அறிவிக்கப்படும் இறைவார்த்தை, அருட்சாதனங்கள், வழிபாட்டை முன்னின்று நடத்தும் பணியாளர்கள், கூடியிருக்கும் மக்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக நற்கருணை ஆகியவற்றின் வாயிலாக அவர் தமது இணையற்ற குருத்துவத்தைச் செயல்படுத்துகிறார் (காண்க. SC, 7). புனித அகுஸ்தின் கற்பித்தது போல, திருஅவை நற்கருணைக் கொண்டாட்டத்தில் ஆண்டவரின் உடலைப் பெற்றுக்கொண்டு, தான் எதைப் பெறுகிறதோ அதுவாகவே மாறுகிறது. அதாவது கிறிஸ்துவின் உடலாகவும், "தூய ஆவியின் வழியாகக் கடவுள் வாழும் உறைவிடமாகவும்" (எபேசியர் 2:22) மாறுகிறது. இதுவே நம்மை கிறிஸ்துவோடு இணைத்து, இறை ஒன்றிப்பில் நம்மைக் கட்டியெழுப்பும் "நமது மீட்பின் பணி" ஆகும்.
புனித திருவழிபாட்டில், இந்த ஒன்றிப்பானது “சடங்குகள் மற்றும் மன்றாட்டுகள் வழியாக” (SC, 48) செயலாக்கம் பெறுகிறது. “மன்றாட்டே நம்பிக்கையின் விதி” (lex orandi, lex credendi) எனும் பொன்மொழிக்கு ஏற்ப, திருஅவையின் வழிபாட்டு முறைகள் அவளது நம்பிக்கையை வெளிப்படுத்துவதோடு, அதே வேளையில் திருஅவை என்ற அடையாளத்தையும் வடிவமைக்கின்றன. பறைசாற்றப்படும் இறைவார்த்தை, அருட்சாதனக் கொண்டாட்டங்கள், வழிபாட்டு சைகைகள், அமைதி மற்றும் புனிதமான தளம் ஆகிய அனைத்தும் தந்தையாம் இறைவனால் அழைக்கப்பட்ட மக்களையும், கிறிஸ்துவின் உடலையும், தூய ஆவியின் ஆலயத்தையும் பிரதிபலிப்பதுடன் அவற்றை உருவாக்குவதிலும் பங்காற்றுகின்றன. இவ்வாறாக, ஒவ்வொரு கொண்டாட்டமும் செபிக்கின்ற திருஅவையின் உண்மையான வெளிப்பாடாகத் திகழ்கிறது என்பதை திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் நினைவூட்டினார்.
திருவழிபாடு என்பது கிறிஸ்துவின் மறைபொருளுக்கான ஒரு பணி என்றால், அது ஏன் “திருஅவையின் செயல்பாடுகள் அனைத்தும் நோக்கியிருக்கும் சிகரம் (Summit) மற்றும் அவளது ஆற்றல் அனைத்தும் ஊற்றெடுக்கும் ஊற்று” (SC, 10) என்று அழைக்கப்படுகிறது என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். திருஅவையின் செயல்பாடுகள் திருவழிபாட்டோடு மட்டும் நின்றுவிடுவதில்லை; இருப்பினும், நற்செய்திப் பணி, ஏழைகளுக்கான சேவை, மனித வாழ்வின் எதார்த்தங்களில் உடன் பயணித்தல் என திருஅவையின் அனைத்து பணியும் இந்தச் 'சிகரத்தை' நோக்கியே சங்கமிக்கின்றன. அதற்குப் பிரதிபலனாக, திருவழிபாடு நம்பிக்கையாளர்களை ஆண்டவரின் பாஸ்கா நிகழ்வில் இடைவிடாது திளைக்கச் செய்வதன் மூலம் அவர்களைத் தாங்கிப் பிடிக்கிறது. இறைவார்த்தை அறிவிப்பு, அருட்சாதனக் கொண்டாட்டங்கள் மற்றும் பொது மன்றாட்டுகள் வழியாக நம்பிக்கையாளர்கள் தங்களது நம்பிக்கையிலும் இறைப்பணியிலும் வலுவூட்டப்பட்டுப் புத்துயிர் பெறுகிறார்கள். எனவே, திருவழிபாட்டில் பங்கேற்பது என்பது 'உள்ளார்ந்த' மற்றும் 'வெளிப்புற' ஈடுபாடு ஆகிய இரண்டுமே ஆகும்.
இந்த பங்கேற்பு அன்றாட வாழ்க்கையில், அறநெறி மற்றும் ஆன்மீக ஆற்றலோடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்; அப்போதுதான் நாம் கொண்டாடும் திருவழிபாடு நமது வாழ்வாகவே மாறும். வழிபாட்டில் நாம் பெற்ற அனுபவத்தை, நிஜ வாழ்க்கையில் செயல்படுத்தும் ஒரு நம்பிக்கையுள்ள வாழ்வை இது நம்மிடம் எதிர்பார்க்கிறது. இவ்வாறாக, நமது அன்றாட வாழ்வே தூயதும் கடவுளுக்கு உகந்ததுமான 'உயிருள்ள பலியாகவும்', நாம் அவருக்குச் செலுத்தும் 'உண்மையான வழிபாடாகவும்' (உரோமையர் 12:1) மாறுகிறது. எனவே, “திருவழிபாடு திருஅவையில் உள்ளவர்களை நாள்தோறும் ஆண்டவருக்குரிய தூய ஆலயமாகக் கட்டியெழுப்புவதுடன்” (SC, 2), அனைவரையும் வரவேற்கின்ற ஒரு திறந்த சமூகமாகவும் அவர்களை உருவாக்குகிறது. திருவழிபாட்டில் தூய ஆவியார் குடிகொண்டுள்ளார்; அது நம்மை கிறிஸ்துவின் வாழ்விற்குள் அழைத்துச் சென்று, நம்மை அவரது உடலாக மாற்றுகிறது. இவ்வாறாக, கிறிஸ்துவில் ஒட்டுமொத்த மனிதகுலமும் ஒன்றாக இணைந்திருப்பதன் அடையாளமாக அது திகழ்கிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியது போல: ““உலகம் இன்னும் அதனை உணராமலே இருக்கலாம்; ஆனால், ஆட்டுக்குட்டியின் திருமண விருந்தில் பங்குகொள்ள எல்லாருக்குமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது”(Desiderio desideravi, 5).
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, திருவழிபாட்டின் சடங்குகள், அடையாளங்கள், வழிபாட்டுச் சைகைகள் மற்றும் அனைத்திற்கும் மேலாக அதில் விளங்கும் கிறிஸ்துவின் உயிருள்ள உடனிருப்பு ஆகியவற்றால் நம் உள்ளம் செதுக்கப்பட நாம் இடமளிப்போம். இவை குறித்து வரும் மறைக்கல்வித் தொடர்களில் நாம் தொடர்ந்து ஆழமாகப் பயில்வோம்.
இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை திருத்தந்தை நிறைவு செய்தார். இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது திருத்தூது ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
