புனித தாமஸ் அக்வினாஸ் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு அவர்கள். புனித தாமஸ் அக்வினாஸ் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு அவர்கள். 

வேறுபாடுகளை வளமாக மாற்றுவதே உண்மையான சகோதரத்துவம் – கர்தினால் கூவக்காடு

பன்முகத்தன்மை என்பது அச்சுறுத்தலாக அல்லாமல், மனித வளத்தின் ஊற்றாகக் கருதப்பட வேண்டும்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

"பன்முகத்தன்மை என்பது அச்சுறுத்தலாக அல்லாமல், மனித வளத்தின் ஊற்றாகக் கருதப்பட வேண்டும்" என்று கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜூன் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உரோமிலுள்ள புனித தாமஸ் அக்வினாஸ் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற “ஐரோப்பாவில் பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள்: உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் சகோதரத்துவத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான இருநாள் மாநாட்டில் உரையாற்றியபோது  கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

பல்வேறு மத சமூகங்களுக்கிடையேயான உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் அனுபவப் பரிமாற்றங்கள் மூலம் சகோதரத்துவ பிணைப்பை வலுப்படுத்துவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

இந்த மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பல்சமய உரையாடலுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு அவர்கள், "குறிப்பாக போர்கள், வன்முறை, பாகுபாடு மற்றும் வெறுப்பு நிறைந்த உலகில் சகோதரத்துவம் பெரும்பாலும் ஒரு கற்பனையான இலட்சியமாகவே பார்க்கப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.

1986 ஆம் ஆண்டில் புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட “அசிசியின் ஊக்கம்” (Spirit of Assisi) முயற்சியை எடுத்துக்காட்டிய கர்தினால் கூவக்காடு அவர்கள்,, புனித பிரான்சிஸ் அசிசி உலகளாவிய சகோதரத்துவத்தின் நிலையான முன்மாதிரியாக விளங்குகிறார் என்று குறிப்பிட்டார்.

"உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் உறவுகளை உருவாக்க வேண்டும்" என்ற திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் அழைப்பைப் பற்றி சிந்தித்த கர்தினால் கூவக்காடு அவர்கள், "சகோதரத்துவம் என்பது கருத்து வேறுபாடுகளை ஒருவரோடு ஒருவர் இணைந்து மேன்மை பெறுவதற்கான வாய்ப்புகளாக மாற்றும் திறன் கொண்ட ஒரு வாழ்வியல் உண்மை" என்று வலியுறுத்தினார்.

ஐரோப்பாவின் வளமான கலாச்சார மற்றும் மத பன்முகத்தன்மை குறித்துப் பேசிய கர்தினால் கூவக்காடு அவர்கள், மக்கள் இந்த பாரம்பரியத்தை மதிக்கவும், பொதுவான நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்படவும் ஊக்குவித்தார்.

அனைத்து மதங்களைச் சேர்ந்த நம்பிக்கையாளர்களும் உரையாடல், ஒருவருக்கொருவர் காட்டும் மரியாதை, ஒற்றுமை மற்றும் சமூக நட்பு ஆகியவற்றின் மூலம் அமைதி, நீதி மற்றும் மனித சகோதரத்துவத்தை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு கர்தினால் தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

24 ஜூன் 2026, 12:55