தனது புதிய நூலின் இத்தாலிய மொழிப் பதிப்பைப் பார்வையிடும் திருத்தந்தை பதினான்காம் லியோ. தனது புதிய நூலின் இத்தாலிய மொழிப் பதிப்பைப் பார்வையிடும் திருத்தந்தை பதினான்காம் லியோ.  (© Freedom Under Grace)

அருளின் கீழ் சுதந்திரம் : ஆங்கிலத்தில் வெளியாகும் திருத்தந்தை பதினான்காம் லியோவின் ஆரம்பகால எழுத்துகள்!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் ஆரம்பகால எழுத்துகளின் ஆங்கிலப் பதிப்பான "Freedom Under Grace" என்ற நூல், பென்குயின் ரேண்டம் ஹவுஸ் கிறிஸ்தவ வெளியீட்டுப் பிரிவின் 'Image Books' பதிப்பகத்தால் 2026 செப்டம்பர் 15, செவ்வாயன்று வெளியிடப்படவுள்ளது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோவாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அருள்பணி ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் எழுதிய ஆரம்பகால பொது எழுத்துகளின் ஆங்கிலப் பதிப்பு, 2026 செப்டம்பர் 15, செவ்வாயன்று வெளியாகிறது. “அருளின் கீழ் சுதந்திரம் : என்னை உருவாக்கிய ஆன்மீக மரபைப் பற்றிய சிந்தனைகள்” (Freedom Under Grace: Reflections on the Spiritual Tradition That Formed Me) என்ற தலைப்பில் வெளியாகும் இந்நூலை, பென்குயின் ரேண்டம் ஹவுஸ் கிறிஸ்தவ வெளியீட்டுப் பிரிவின் Image Books பதிப்பகம் வெளியிடுகிறது.

வத்திக்கான் பதிப்பகத்தால் இத்தாலிய மொழியில் "Liberi sotto la Grazia" என்ற பெயரில் முதலில் வெளியிடப்பட்ட இந்நூல், 2001 முதல் 2013 வரை புனித அகுஸ்தினார் சபையின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியபோது அருள்பணி பிரிவோஸ்ட்  அவர்கள் ஆற்றிய மறையுரைகள், உரைகள், செய்திகள் மற்றும் கடிதங்களைத் தொகுத்து வழங்குகிறது.

அகுஸ்தினார் அருள்பணியாளர்கள் ரொக்கோ ரொன்சானி, மிகுவேல் ஆஞ்சல் மார்ட்டின் ஹுவாரெஸ், மைக்கேல் டி கிரெகோரியோ ஆகியோர் தொகுத்துள்ள இந்த நூல், திருத்தந்தையின் ஆழமான ஆன்மீகம், மேய்ப்புப் பார்வை மற்றும் மறைப்பணிச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் அன்பு, பணிவாழ்வு மற்றும் நம்பிக்கையின் செய்தியை உலகிற்கு எடுத்துரைப்பதாக வெளியீட்டாளர் காம்பெல் வார்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

புனித அகுஸ்தினாரின் விதிமுறையிலிருந்து பெறப்பட்ட "அருளில் சுதந்திரமானவர்கள்" என்ற கருத்தே இந்நூலின் தலைப்பிற்கு ஊக்கமளித்துள்ளது. இறைவனைத் தேடுதல், இறையருளின் முதன்மை, ஏழைகள்மீதான அக்கறை மற்றும் நவீன உலகிற்கு புரியும் மொழியில் நற்செய்தியை அறிவித்தல் போன்ற அகுஸ்தினிய ஆன்மீகக் கருத்துகள் இந்நூலில் வலியுறுத்தப்பட்டுள்ளன என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

26 ஜூன் 2026, 12:47