நம்பிக்கையும் பொறுப்புணர்வும் கொண்ட தலைவர்களை உருவாக்க வேண்டும்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஏழைகள், அகதிகள், குடிபெயர்ந்தோர் மற்றும் சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட மக்களுடன் இணைந்து பயணிப்பது கல்வி நிறுவனங்களின் முக்கியப் பொறுப்பு என்றும், சமூக நீதியையும் பொதுநலனையும் அடிப்படையாகக் கொண்ட மாற்றங்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்கள் பங்காற்ற வேண்டும் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.
ஜூன் 25, வியாழனன்று, வட அமெரிக்காவின் இயேசு சபை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தலைவர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, கல்விப் பணியில் அவர்கள் ஆற்றி வரும் சேவைக்கு நன்றி தெரிவித்ததுடன் திருஅவையுடனும் இயேசு சபையுடனும் தங்களது உறவை மேலும் வலுப்படுத்துமாறு அழைப்பு விடுத்தார்.
இன்றைய உலகம் மதச்சார்பின்மை, வறுமை, குடிபெயர்வு, சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்ட திருத்தந்தை, குறிப்பாக, பல இளைஞர்கள் நம்பிக்கையற்ற சூழலில் வாழ்ந்து வருவதாகவும் கவலை தெரிவித்தார்.
மேலும் இயேசு சபையின் நான்கு உலகளாவிய திருத்தூதுப் பணித் தெரிவுகளை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, ஆன்மீகப் பயிற்சிகள் மற்றும் பகுத்தறிவின் வழியாக மக்களை இறைவனை நோக்கி வழிநடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், மாணவர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் கிறிஸ்துவுடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளை கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
இளைஞர்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் வகையில் உரையாடல், சேவை மற்றும் செப வாழ்க்கையை ஊக்குவிக்க வேண்டுமெனக் அவர்களைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கல்வி நிறுவனங்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இறுதியாக, செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்களை பொறுப்புடன் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த திருத்தந்தை, கத்தோலிக்க சமூகப் போதனைகளின் அடிப்படையில் டிஜிட்டல் யுகத்திற்கான புதிய அணுகுமுறைகளை உருவாக்க கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
