புனிதர்கள் பேதுரு–பவுல்: திருஅவையின் ஒற்றுமைக்கு நிலையான சாட்சிகள்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
பேதுரு மற்றும் பவுலின் சாட்சிய வாழ்வும், உரோமில் அவர்கள் சிந்திய இரத்தமும், இறைவனின் அளவற்ற அன்பை வெளிப்படுத்துவதோடு, நற்செய்தி உரோம் நகரில் ஆழமாக வேரூன்றி, அதிகாரத்தை ஆதிக்கமாக அல்ல, மனித வாழ்விற்கான சேவையாக உலகிற்கு எடுத்துக்காட்டியதாக திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
ஜூன் 29, திங்களன்று, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவையொட்டி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, உரோம் திருஅவைக்கும் உலகம் முழுவதுமுள்ள அனைத்து உள்ளூர் திருஅவைகளுக்கும் இடையேயான நம்பிக்கை மற்றும் அன்பின் ஒன்றிப்பை புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெருவிழா நினைவூட்டுவதாகக் கூறினார்.
இன்றும் உயிர்த்தெழுந்த கிறிஸ்து, தம்மைப் பின்பற்றும் சாட்சிகளின் வழியாக உலகின் மையங்களிலும் எல்லைப்புறங்களிலும் செயல்பட்டு வருகிறார் என்றும், மன்னிக்கப்பட்ட பாவிகளான நம்மை இறைவன் தனது அருளின் கருவிகளாக அழைக்கிறார் என்றும் திருத்தந்தை எடுத்துக்காட்டினார்.
பேதுருவும் பவுலும் பிறப்பிலும், குணநலன்களிலும், பணியாற்றிய முறையிலும் வேறுபட்டவர்களாக இருந்தபோதிலும், ஒரே தூய ஆவியால் ஒன்றிணைக்கப்பட்டனர் என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, திருஅவையின் ஒற்றுமை என்பது வேறுபாடுகளை அழிப்பதல்ல; அவற்றை இறையன்பில் இணைப்பதே என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர்களின் வாழ்வு, ஆதிக்கத்தை அல்ல, சேவை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உலகிற்கு அறிவித்த சாட்சியாக அமைந்தது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
இறுதியாக, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் பரிந்துரையால், திருஅவையின் கத்தோலிக்கப் பண்பை ஆழமாக உணரவும், சகோதரத்துவத்தை வளர்க்கவும், ஒற்றுமையை பாதிக்கும் அனைத்தையும் தவிர்க்கவும், கிறிஸ்தவ ஒற்றுமைப் பயணத்திலும் அனைவருடனான நேர்மையான உரையாடலிலும் நிலைத்திருக்கவும் இறைவன் அருள்புரிவாராக இறைவேண்டல் செய்து திருத்தந்தை தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
