புனித பேதுருவும் பவுலும் ஒற்றுமையையும் அன்பின் சேவையையும் உலகிற்கு எடுத்துக்காட்டியவர்கள்!

புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவையொட்டி வத்திக்கானில் நடைபெற்ற திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், பேதுரு மற்றும் பவுல் திருஅவையின் ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் நற்செய்திப் பணியின் நிலைத்த தூண்கள் என்று வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

பேதுரு, பேதுரு, திருஅவையின் ஒற்றுமையை நிலைநிறுத்திய மேய்ப்பராகவும், பவுல் பிற இன மக்களிடையே நற்செய்தியை அறிவித்த அயராத திருத்தூதராகவும் திகழ்ந்தனர் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இருவரும் வெவ்வேறு பண்புகளும் பின்னணிகளும் கொண்டிருந்தபோதிலும், கிறிஸ்துவின் ஒரே பணிக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்தனர் என்று கூறினார்.

ஜூன் 29, திங்கள்கிழமை, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவையொட்டி  வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் இடம்பெற்ற திருப்பலியில் மறையுரையாற்றியபோது இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் திருஅவையின் ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் நற்செய்திப் பணியின் நிலைத்த தூண்களாக விளங்குகின்றனர் என்று வலியுறுத்தினார்.

பேதுருவின் வாழ்க்கை, தவறுகளை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பி, திருஅவையின் ஒற்றுமையை நிலைநிறுத்திய சாட்சியாக அமைந்தது என்று எடுத்துரைத்த திருத்தந்தை, அவரிடம் ஒப்படைக்கப்பட்ட திறவுகோல்கள் அதிகாரத்தின் அடையாளமல்ல; மாறாக, மக்களை ஒன்றிணைக்கும் பொறுப்பின் அடையாளம் என்று குறிப்பிட்டார்.

மேலும், திருஅவையில் ஒற்றுமை என்பது தனிப்பட்ட கருத்துகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் உருவாகாது; மாறாக, உண்மையின் வெளிச்சத்தில் ஒருவருக்கொருவர் செவிமடுத்து, சந்திப்பிற்கான வழிகளைத் தேடுவதன் மூலம் கட்டியெழுப்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

புனித பவுலை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, இறைவார்த்தையின் வல்லமையால் மாற்றமடைந்த சவுல், வன்முறையின் பாதையிலிருந்து அன்பின் பாதைக்கு அழைக்கப்பட்டு, உலகெங்கும் நற்செய்தியை அறிவித்த திருத்தூதராக மாறினார் என்று சுட்டிக்காட்டினார்.

இன்றைய திருஅவையும் பேதுரு மற்றும் பவுலின் வாழ்வைப் பின்பற்றி, ஒற்றுமையை உருவாக்குபவர்களாகவும், அன்போடு உண்மைக்குச் சாட்சியம் வழங்குபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த திருத்தந்தை, மறைமாநில பேராயர் திருத்தந்தையுடனான ஒன்றிப்பையும், இறைமக்களை நல்ல மேய்ப்பரைப் போன்று அன்புடனும் அர்ப்பணிப்புடனும் வழிநடத்தும் அவரது மேய்ப்புப் பொறுப்பையும் வெளிப்படுத்தும் சிறப்பு திருவுடையான பல்லியம் அணிவிக்கும் திருச்சடங்கு, ஒவ்வொரு மேய்ப்பரும் தமக்கே ஒப்படைக்கப்பட்ட இறைமக்களை அன்புடன் சுமந்து சேவை செய்ய வேண்டிய அர்ப்பணிப்பின் அடையாளம் என்றும் விளக்கினார்.

இறுதியாக, மீட்பரின் வழியில் ஒற்றுமைப் பயணத்தில் நிலைத்திருக்கவும், உலகம் முழுவதும் நற்செய்தியின் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் பரப்பவும், புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் பரிந்துரையை வேண்டி திருத்தந்தை தனது மறையுரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

29 ஜூன் 2026, 12:11