ஒன்றிணைந்த பயணத்தை வலுப்படுத்த கண்ட அளவிலான மாமன்றத் தலைவர்களுடன் திருத்தந்தை சந்திப்பு
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
மாமன்ற செயல்பாட்டின் அடுத்தகட்ட முன்னேற்றம் குறித்து, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஜூன் 25, வியாழனன்று, கண்ட அளவிலான மாமன்ற அமைப்புகளின் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து கலந்துரையாடினார்.
ஜூன் 23 முதல் 25 வரை இடம்பெற்ற மூன்று நாள் ஆலோசனை அவைக் கூட்டத்தின் நிறைவாக இடம்பெற்ற இச்சந்திப்பில், இலத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஓசியானியா, மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், கண்ட அளவிலான மாமன்ற ஒருங்கிணைப்பாளர்களும் பங்கேற்றனர்.
ஆயர் மாமன்றத்தின் பொது செயலரான கர்தினால் Mario Grech அவர்கள், திருத்தந்தையுடனான இச்சந்திப்பு, திருஅவையின் ஒன்றிணைந்த பயண மாற்றத்தை முன்னெடுப்போருக்கு உற்சாகமளிக்கும் முக்கிய அடையாளமாக அமைந்ததாகக் கூறினார். மேலும், உள்ளூர் திருஅவைகளில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்றிணைந்த பயணப் பள்ளிகள், பயிற்சித் திட்டங்கள், கருத்தரங்குகள், செவிமடுத்தல் மற்றும் பகுத்தறிதல் நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தார்.
அருட்சகோதரி நத்தாலி பெக்குவார்ட் தலைமையிலான நீண்ட இறைவேண்டலுடன் தொடங்கிய இக்கூட்டத்தில், செவிமடுத்தல் மற்றும் பகுத்தறிதல் முக்கிய அம்சங்களாக அமைந்தன. மாமன்றத்தின் இறுதி ஆவணத்தை ஒவ்வொரு உள்ளூர் திருஅவையும் தங்களது பணிச் சூழலுக்கேற்ப செயல்படுத்துவது இந்த புதிய கட்டத்தின் நோக்கம் என்றும் வலியுறுத்தப்பட்டது.
2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள திருஅவைப் பேரவைக்கான பயணத் திட்டமும் கூட்டத்தில் முக்கிய இடம் பெற்றது. அது நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 2027ஆம் ஆண்டில் மறைமாவட்ட மற்றும் கீழைத் திருஅவை (Eparchy) அளவிலான மதிப்பீட்டுப் பேரவைகள் நடைபெறும். அதைத்
தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில ஆயர் பேரவைகள் கூடும். 2028ஆம் ஆண்டின் முதல் மாதங்களில் கண்ட அளவிலான பேரவைகள் நடத்தப்படும். இறுதியாக, 2028ஆம் ஆண்டு அக்டோபரில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தலைமையில் வத்திக்கானில் திருஅவைப் பேரவை நடைபெறும்.
கண்ட அளவிலான அமைப்புகள் உள்ளூர் திருஅவைகளை கண்காணிப்பதற்காக அல்ல, மாறாக உடனிருந்து வழிநடத்தவும், ஒத்துழைப்பு, பொறுப்புப் பகிர்வு மற்றும் ஒருவருக்கொருவர் அனுபவங்களைப் பகிர்ந்து வளரும் வாய்ப்பை உருவாக்கவும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 2028ஆம் ஆண்டு திருஅவைப் பேரவை, மாமன்றப் பயணத்தின் முடிவல்ல; மாறாக, திருஅவையின் புதுப்பித்தல், பகுத்தறிதல் மற்றும் கொண்டாட்டத்தின் புதிய கட்டமாக அமையும் என்றும் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
