புதன் பொது மறைக்கல்வி உரையின்போது குழந்தை ஒருவரை ஆசீர்வதித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள். புதன் பொது மறைக்கல்வி உரையின்போது குழந்தை ஒருவரை ஆசீர்வதித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள்.  (@Vatican Media)

நோயாளிகளின் காயங்களை ஆற்றுவதன் வழியே இறையாட்சியை அறிவிக்க வேண்டும்!

காரித்தாஸ் அனைத்துலக அமைப்பின் நலவாழ்வு மாநாட்டிற்காக அனுப்பிய செய்தியில், திருத்தந்தை, நோயாளிகளுக்கான நலவாழ்வுப் பணிகளில் நற்செய்தி விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒத்துழைப்பு மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

நோயுற்றோரின் மத்தியில் திருஅவை தனது இருப்பின் மூலம் இறையாட்சியை அறிவிக்கிறது என்றும், மீட்பு என்பது வெறும் கருத்தாக்கமல்ல; துன்புறுவோரின் காயங்களை ஆற்றும் செயலிலிருந்தே அது தொடங்குகிறது என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் சார்பாக திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிடப்பட்டு காரித்தாஸ் அனைத்துலக  கூட்டமைப்பின் (Caritas Internationalis) “காரித்தாஸ் அமைப்பில் ஆரோக்கியத்திற்கான முழுமையான அணுகுமுறை” என்ற தலைப்பிலான நலவாழ்வு மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு அனுப்பிய செய்தியில், இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை தனது ஆன்மீக நெருக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

"நோயாளிகளுக்கான நலவாழ்வுப் பணிகளில் நற்செய்தி விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பு மற்றும் ஒருமைப்பாட்டு முயற்சிகளுக்கு இம்மாநாடு புதிய உத்வேகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் என்று திருத்தந்தை தனது செய்தியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்."

திருவிவிலியத்தில் இயேசு தெய்வீக மருத்துவராக சித்தரிக்கப்படுகிறார் என்றும், மனம், உடல் மற்றும் ஆன்மா சார்ந்த பல்வேறு நோய்களிலிருந்து மக்களைக் குணப்படுத்தி, அவர்களின் துன்பம், அவமானம் மற்றும் தனிமை நிலைகளைப் போக்கினார் என்றும் திருத்தந்தையின் செய்தி எடுத்துரைக்கிறது.

ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் இறைவனால் அளிக்கப்பட்ட அழியாத மாண்பு நிறைந்துள்ளது என்பதை மகத்தான மானுடம் திருத்தூது மடல் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள செய்தி, இயேசு மக்களை குணப்படுத்தியதன் வழியாக அவர்களின் மனித மாண்பை உறுதிப்படுத்தி வெளிக்கொணர்ந்தார் எனக் கூறுகிறது.

இறுதியாக, தேவையின் விளிம்பில் வாழும் மக்களிடம் இறைவனின் இரக்கத்தையும் நன்மையையும் கொண்டு செல்லும் பணியில் தொடர்ந்து ஈடுபடுமாறு அவர்களை ஊக்குவித்த திருத்தந்தை, மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் மற்றும் அவர்களது ஒத்துழைப்பாளர்களுக்கும் தனது திருத்தூது ஆசீரை வழங்கி செய்தியை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

25 ஜூன் 2026, 11:02