புனித பத்தாம் பியஸ் புனித பத்தாம் பியஸ்  (AFP or licensors)

திருஅவை ஒன்றிப்பை காக்க SSPX-க்கு திருத்தந்தை வேண்டுகோள்!

சுவிட்சர்லாந்தின் எகோனில் ஜூலை 1ஆம் தேதி நடைபெறவிருந்த திருத்தந்தையின் அனுமதி இன்றி நான்கு புதிய ஆயர்களை திருப்பொழிவு செய்யும் திட்டத்தை நிறுத்துமாறு, புனித பத்தாம் பத்திநாதர் குருத்துவ சகோதரத்துவ அமைப்புக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ இறுதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

சுவிட்சர்லாந்தின் எகோனில் (Écône) ஜூலை 1ஆம் தேதி காலை நடைபெறவிருந்த, திருத்தந்தை அனுமதியின்றி நான்கு புதிய ஆயர்களை திருப்பொழிவு செய்யும் நிகழ்வை மேற்கொள்ள வேண்டாம் என்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் புனித பத்தாம் பத்திநாதர் குருத்துவ சகோதரத்துவ அமைப்பிற்கு ஓர் இறுதி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்போவில் செய்தியாளர்களை சந்தித்த போது அண்மையில் அறிவித்ததை சுட்டிக்காட்டிய திருத்தந்தை,  தனது கடிதத்தில் “திருத்தூதர் பேதுருவின் வாரிசாக இறைவன் எனக்கு அளித்த பொறுப்பின் அடிப்படையில் தந்தையாரான இதயத்துடன் உங்களை அணுகுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த அமைப்புடன் இணைந்த ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்பணித்துவ  மாணவர்கள் மற்றும் நம்பிக்கையாளர்களை நோக்கியும் தனது வேண்டுகோளை அவர் முன்வைத்துள்ளார்.

திருஅவை வழங்கும் வழிபாட்டு மரபு, குருத்துவப் பயிற்சி, அப்போஸ்தல பணியாற்றும் உற்சாகம் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைக்கு இணைந்திருக்கும் அவர்களின் முயற்சிகளை திருஅவை மதிப்பதாகவும், அதனாலேயே முந்தைய திருத்தந்தையர்கள் தொடர்ந்து காட்டிய கவனமும் உரையாடலும் நினைவுகூரப்படுவதாகவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

“உங்கள் இதயபூர்வமான நலனுக்காக நான் வேண்டுகிறேன்: தயவுசெய்து இந்த முடிவிலிருந்து விலகுங்கள்” என்று உருக்கமான முறையில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, நீங்கள் செய்யவிருக்கும் இந்த பிளவுண்டாக்கும் செயல், நம்பிக்கையாளர்களுக்கு சட்டப்பூர்வமான திருவழிபாட்டு அருள்சாதனங்களை  பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

திருஅவையானது, தூய ஆவியானவர் சாத்தியமாக்கக்கூடியதும் பலனளிக்கக்கூடியதுமான ஒரு உரையாடல் மற்றும் புரிதலுக்கான பாதைக்கு திறந்தே உள்ளது,” என்று பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டு, அந்தச் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் அருட்தந்தை தாவீது பாலியாரானிக்கு முகவரியிடப்பட்ட கடிதத்தில் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

“நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன்; ஏனெனில் கிறிஸ்துவின் தையல்களற்ற ஆடையை கிழிப்பது மிகக் கடுமையான பாவமாகும் என்று குறிப்பிட்டுள்ள  திருத்தந்தை, ஆண்டவர் உங்கள் மனச்சான்றுகளை ஒளிர்வித்து, உங்கள் இதயங்களை விழிப்படையச் செய்வாராக என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் துயரமும் நம்பிக்கையும் கலந்த இதயத்துடன், கிறிஸ்துவிடமிருந்து பெற்ற அதிகாரத்தின் அடிப்படையில், நீங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள செயலில் இருந்து விலகுமாறு நான் கேட்டுக்கொள்வது எனது கடமை என நான் உணர்கிறேன் என்று தெரிவித்துள்ள திருத்தந்தை, இந்த நோக்கங்களை நல்ஆலோசனையின் அன்னையான கன்னி மரியாவின் தூய்மைமிகு இதயத்திடம் ஒப்படைக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

30 ஜூன் 2026, 11:55