வெனிசுலாவில் ஏற்பட்ட பேரழிவின் காட்சிகள். வெனிசுலாவில் ஏற்பட்ட பேரழிவின் காட்சிகள். 

வெனிசுலா பேரிடர்: உதவிக்கரம் நீட்டிய திருப்பீடம்

வெனிசுலாவின் லா குவைரா மாநிலக் கடலோரப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இரட்டை நிலநடுக்கங்களால் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதோடு, கராகஸ் அனைத்துலக விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

வெனிசுலாவில் ஏற்பட்ட  இரட்டை நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160-ஐ தாண்டியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட 1 இலட்சம் யூரோ அவசர நிதியுதவியை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கியுள்ளார்.

திருப்பீடத்தின் திருத்தந்தை நன்கொடை அலுவலகம் (Apostolic Almoner's Office) வழியாக வழங்கப்படும் இந்த உதவி, வெனிசுலாவிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் அல்பெர்டோ ஓர்டேகா மார்டின் மற்றும் கராகஸ் பேராயர் ரவுல் பியோர்ட் கஸ்டியோ ஆகியோரின் ஒருங்கிணைப்பில் வழங்கப்படும் என்றும், இது ஆரம்பகட்ட உதவியாக மட்டுமே இருப்பதுடன், உள்ளூர் திருஅவையால் அடையாளம் காணப்படும் தேவைகளுக்கு ஏற்ப தொடர்ந்து கூடுதல் உதவிகள் வழங்கப்படும் என்றும் திருப்பீடம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவான இரு நிலநடுக்கங்கள், நாட்டின் கடலோரப் பகுதியான லா குவைரா மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், 20-க்கும் மேற்பட்ட பின்அதிர்வுகளும் பதிவாகியுள்ளன. கராகஸின் சிமோன் பொலிவார் அனைத்துலக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாட்டின் பல கத்தோலிக்க பங்குகள் இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் அவசர நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. கராகஸ் பேராலயம் உள்ளிட்ட பல ஆலயங்களும் சேதமடைந்தபோதிலும், திருஅவை தனது மனிதாபிமானப் பணியை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

இதற்கிடையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாடுகளிலிருந்தும் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் வெனிசுலாவை வந்தடைந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

26 ஜூன் 2026, 12:49