உண்மையையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தும் பணியே எழுத்து!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
எழுத்து என்பது உண்மையை வெளிப்படுத்தும் ஒரு செயலாகும் என்றும், அது நாம் யார், எதை நம்புகிறோம், எதற்காக நம்பிக்கை கொள்கிறோம், நாம் கனவு காணும் எதிர்காலம் என்ன என்பதைக் காட்டுகிறது என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
ஜூன் 24, புதனன்று, 1926 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வத்திக்கான் பதிப்பகத்தின் (Libreria Editrice Vaticana) நூற்றாண்டு விழாவையொட்டி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களை திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் சந்தித்தபோது இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, நூல்கள் மற்றும் எழுத்தின் முக்கியத்துவத்தை சிந்திக்க இது ஒரு சிறப்பான தருணம் என்றும், எழுத்தாளர்கள் தங்கள் பல்வேறு மொழிகளாலும் பாணிகளாலும் சமூகத்திற்கு ஆசிரியர்களாகவும் முன்மாதிரிகளாகவும் விளங்குகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
“உண்மை என்பது பாதுகாக்க வேண்டிய ஒரு எல்லை அல்ல; பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு நன்மை” என்று வலியுறுத்திய திருத்தந்தை, இலக்கியம் மனித அனுபவங்களின் முழுப் பரப்பையும் தன்னுள் கொண்டுள்ளது என்றும், பிறரின் கண்கள் வழியாக உலகைப் பார்க்க உதவுவதால் இரக்கம், கருணை, பகிர்வு மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்க்கிறது என்றும் எடுத்துக்காட்டினார்.
உண்மையைத் தேடும் இந்தப் பயணத்தில், இறைவனோடும் அயலாரோடும் நடத்தும் நேர்மையான உரையாடல்களில் உண்மை நமக்கு வெளிப்படுகிறது என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
மேலும் கதாபாத்திரங்களை உருவாக்கும் எழுத்தாளர்கள் மனித வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை வாசகர்கள் அனுபவிக்க வழிவகுக்கின்றனர் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, மனித வாழ்க்கையின் ஆழமான உண்மைகளைத் தேடும் எழுத்து, இறைவனின் இருப்பை உணரச் செய்கிறது என்றும், மனிதர்களின் கதைகள், உறவுகள் மற்றும் வாழ்வனுபவங்கள் வழியாக இறைவன் தம்மை வெளிப்படுத்துகிறார் என்றும் எடுத்துக்காட்டினார்.
இறுதியாக, “எங்களுக்கு நீங்கள் தேவை” என்று புனித ஆறாம் பவுல் கூறியதை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, சமரசம், நட்பு, சந்திப்பு மற்றும் அமைதியின் விதைகளை விதைக்கும் பணியை எழுத்தாளர்கள் தொடர வேண்டும் என்று ஊக்குவித்து, அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் திருத்தூது ஆசீரை வழங்கி தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
