இயேசுவின் சிலுவை அன்பின் நுகம்; அது விடுதலைக்கும் நம்பிக்கைக்கும் வழி!

இயேசுவின் சிலுவை மனிதரை ஒடுக்கும் சுமை அல்ல, மாறாக அவர் நம்மோடு சேர்ந்து சுமக்கும் அன்பின் நுகம்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

இயேசு கிறிஸ்துவின் சிலுவை என்பது மனிதரை ஒடுக்கும் சுமை அல்ல; மாறாக, அவர் நம்மோடு சுமக்கும் அன்பின் நுகமாகும் என்றும், அதுவே உண்மையான விடுதலை, நம்பிக்கை மற்றும் மீட்புக்கான பாதை என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஜூலை 05, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, மத்தேயு நற்செய்தியை (மத்தேயு 11:25–30) மையமாகக் கொண்டு இறைவன் தம்மை அறிவாளிகளுக்கும் தற்பெருமை கொண்டோருக்கும் அல்ல, எளிமையும் தாழ்மையும் கொண்டவர்களுக்கே வெளிப்படுத்துகிறார் என்று எடுத்துக்காட்டினார்.

மனித ஞானம் தற்பெருமையாக மாறும்போது, இறைவனின் செயல்பாட்டை உணர முடியாது என்றும், இறை ஞானம் இயேசுவின் மனித அவதாரத்தின் தாழ்மையில் வெளிப்படுகிறது என்றும் கூறிய திருத்தந்தை, சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, எல்லோரும் என்னிடம் வாருங்கள் என்ற இயேசுவின் அழைப்பு, அவரது அன்பில் பங்குகொண்டு, சிலுவையை ஏந்தி அவரைப் பின்பற்றுவதற்கான அழைப்பாகும் என்றும் வலியுறுத்தினார்.

"என் நுகம் இனிமையானது; என் சுமை இலகுவானது" என்ற இயேசுவின் வார்த்தைகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, ஆண்டவரே அதை நம்மோடு சேர்ந்து சுமக்கிறார் என்பதே அந்தச் சுமை இலகுவாக இருப்பதற்குக் காரணம் என்றும், மனிதரின் துன்பங்களையும் பாவத்தின் காயங்களையும் தம்மேல் ஏற்று குணமாக்கும் ஆசிரியராக இயேசு செயல்படுகிறார் என்றும் கூறினார்.

மேலும், "அடிமைத்தனத்தின் மத்தியில் கிறிஸ்து விடுதலையாகவும், போரின் கொடுமையில் கிறிஸ்து நம்பிக்கையாகவும், பாவத்தின் இருளில் கிறிஸ்து மன்னிப்பாகவும் விளங்குகிறார் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, கிறிஸ்துவைப் பின்பற்றுவது தன்னை வருத்திக் கொள்ளும் தவமல்ல; மாறாக, வாழ்க்கையின் இருண்ட சூழ்நிலைகளிலும் உண்மையையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் சுதந்திரத்தின் வழியாகும் என்றும் குறிப்பிட்டார்.

இறுதியாக, திருஅவை மற்றும் ஒட்டுமொத்த உலகின் நலனுக்காகவும், அமைதிக்காகவும் பரிந்துரை செய்ய அமைதியின் அரசியான அன்னை மரியாவிடம் மன்றாடுமாறு நம்பிக்கையாளர்காளைக் கேட்டுக்கொண்டு தனது மூவேளை செப உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

06 ஜூலை 2026, 12:01