அருள்பணி லூசியோ ரூயிஸ் அருள்பணி லூசியோ ரூயிஸ் 

பிறரன்புப் பணிக்கான திருப்பீடத் துறையின் செயலராக அருள்பணி லூசியோ ரூயிஸ் நியமனம்!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், தகவல் தொடர்பிற்கான திருப்பீடத் துறையின் செயலராகப் பணியாற்றி வந்த அருள்பணி லூசியோ ரூயிஸ் அவர்களை, பிறரன்புப் பணிக்கான திருப்பீடத் துறையின் புதிய செயலராக நியமித்துள்ளார். செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் இந்த நியமனத்துடன், மாசிமோ ராலி அவர்கள் உதவிச் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், தற்போது தகவல் தொடர்பிற்கான திருப்பீடத் துறையின் செயலராகப் பணியாற்றி வரும் அருள்பணி லூசியோ ரூயிஸ் அவர்களை, பிறரன்புப் பணிக்கான  திருப்பீடத் துறையின் புதிய செயலராக நியமித்துள்ளார். திருத்தந்தையின் பிறரன்புப் பணி மற்றும் மனிதாபிமானத் திட்டங்களுக்கு திருப்பீடத் துறையே பொறுப்பாகும்.

ஜூன் 30, செவ்வாயன்று, அறிவிக்கப்பட்ட இந்த நியமனத்தைத் தொடர்ந்து அருள்பணி லூசியோ ரூயிஸ் அவர்கள் வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று பொறுப்பேற்க உள்ளார்.

அருள்பணி ரூயிஸ் அவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல்  பிறரன்புப் பணிக்கான திருப்பீடத்துறையை வழிநடத்தி வரும் ஆயர் லூயிஸ் மரின் டி சான் மார்ட்டின் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவார். தகவல் தொடர்பிற்கான திருப்பீடத் துறையின் தலைவராக மான்செராட் அல்வரடோ நியமிக்கப்பட்டது உட்பட, உரோமானிய நிர்வாக அமைப்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தலைமைத்துவ மாற்றங்களின் தொடர்ச்சியாக இந்த நியமனமும் இடம்பெற்றுள்ளது.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த அருள்பணி ரூயிஸ் அவர்கள், 2015 ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தகவல் தொடர்பிற்கான திருப்பீடத் துறை உருவாக்கப்பட்டது முதல் அதில் பணியாற்றி வருகிறார். உரோமிற்கு வருவதற்கு முன்பு, இலத்தீன் அமெரிக்கா முழுவதும் திருஅவையின் தகவல் தொடர்பில் அவர் விரிவான அனுபவத்தைப் பெற்றார். இலத்தீன் அமெரிக்கத் திருஅவையின் தகவல் வலைப்பின்னலுக்கு ஆலோசகராகவும், குவாதலூப் அன்னை பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

உரோமில், அவர் திருச்சிலுவை பாப்பிறை பல்கலைக்கழகத்தில் பயிற்றுனராகவும் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார். தகவல் தொடர்பு உலகின் யூபிலி (2025) மற்றும் எண்ணிம மறைப்பணியாளர்கள் மற்றும் கத்தோலிக்க ஊடகவியலாளர்களின் யூபிலி ஆகியவற்றை ஏற்பாடு செய்யவும் அவர் உதவியுள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அருள்பணி ரூயிஸ் அவர்கள், தகவல் தொடர்பு துறையில் தனது பல ஆண்டுகால சேவைக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார், மேலும் இறைவன் தன்னை எங்கே அழைத்தாலும் அங்கு செல்லத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், தற்போது பிறரன்புப் பணிக்கான  திருப்பீடத் துறையில் பணியாற்றி வரும் மாசிமோ ராலியை அதன் புதிய உதவிச் செயலராகவும் நியமித்துள்ளார், இந்த நியமனமும் வரும் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

01 ஜூலை 2026, 12:57