காஸ்டெல் கந்தோல்போவில் திருத்தந்தை பதினான்காம் லியோ காஸ்டெல் கந்தோல்போவில் திருத்தந்தை பதினான்காம் லியோ  (@Vatican Media)

கோடை விடுமுறைக்காக காஸ்தல் கந்தோல்போ சென்றார் திருத்தந்தை!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஜூலை 5 முதல் 27 வரை தனது வருடாந்திர கோடை விடுமுறையை முன்னிட்டு காஸ்தல் கந்தோல்போவில் அமைந்துள்ள திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லத்தில் தங்கியுள்ளார். இக்காலகட்டத்தில் புதன் மறைக்கல்வி உரை, மற்றும் தனிப்பட்ட சந்திப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அபிசேக் ராஜா அலங்காரம் – வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், தனது கோடை விடுமுறைக்காக  காஸ்தல் கந்தோல்போவில் அமைந்துள்ள திருத்தந்தையர் கோடை விடுமுறை இல்லத்திற்கு சென்றுள்ளார்.

ஜூலை 5 முதல் 27 வரை திருத்தந்தை அங்கு தங்கியிருப்பார். வத்திக்கானில் இருந்து ஏறக்குறைய ஒரு மணி நேரப் பயணத் தொலைவில் அமைந்துள்ள இந்த இல்லம், கோடை விடுமுறையின் போது திருத்தந்தையர்கள் ஓய்வெடுக்கும் இடமாகச் செயல்படுகிறது.

திருத்தந்தை காஸ்தல் கந்தோல்போவில் தங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் அனைத்து புதன் மறைக்கல்வி உரை, தனிப்பட்ட மற்றும் சிறப்புச் சந்திப்புகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என திருத்தந்தை இல்லத்தின் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.

"ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று இடம்பெறும் புதன் மறைக்கல்வி உரையானது ஆகஸ்ட் 5, புதனன்று மீண்டும் தொடங்கும்" என்றும் "அதே வேளையில் ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் மூவேளை செப உரையும், புனித பேதுரு சதுக்கத்திற்குப் பதிலாக காஸ்தல் கந்தோல்போவிலிருந்து வழங்கப்படும்" என்றும் அச்செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 6 முதல் ஜூலை 22 வரையிலான தனது கோடைகால விடுமுறையின் போது, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது ஓய்வுக்கு மத்தியிலும் பல மேய்ப்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டார்.

அந்த நாள்களில் சுற்றுச்சூழல் பராமரிப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட "லௌதாதோ சி கிராமம்" (Laudato Si’ Village) என்ற இடத்தில் திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றினார், மேலும் வில்லனோவாவின் புனித தோமா  என்ற பாப்பிறை பங்கு மற்றும் அல்பானோ பேராலயம் ஆகியவற்றிற்கும் வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் காலகட்டத்தில் திருத்தந்தை பல முக்கிய சந்திப்புகளையும் மேற்கொண்டார். அவற்றில் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்ததுடன், காசாவில் உள்ள திருக்குடும்ப ஆலயத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன அரசுத் தலைவர் முஹ்மூத் அப்பாஸ் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

06 ஜூலை 2026, 12:20