சிறிய அன்புச் செயல்களே உலகை மாற்றும்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஜூலை 04, சனிக்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் லம்பேதூசா தீவிற்கு மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின் ஒரு பகுதியாக, அத் தீவின் சலினா பகுதியில் அமைந்துள்ள "அரேனா" விளையாட்டு மைதானத்தில் திருப்பலி நிறைவேற்றினார். அத்திருப்பலியின்போது திருத்தந்தை அவர்கள் ஆற்றிய மறையுரை.
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
இறைவன் எப்போதும் முதலில் நம்மை அன்பு செய்கிறார். இந்தக் கடலின் அழகும், இத்தீவின் சிறப்பும், உங்கள் முகங்களில் ஒளிரும் மகிழ்ச்சியும் அவருடைய இலவச அன்பின் வெளிப்பாடுகளாகும். அந்த அன்பே நம்மை முன்னின்று வழிநடத்துகிறது, நம்மைச் சூழ்ந்து காக்கிறது, ஒன்றிணைக்கிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2013-ஆம் ஆண்டு முதன்முறையாக லம்பேதூசாவிற்கு வந்த வழியில் நானும் இன்று உங்களிடையே வருவதற்குக் கிடைத்த வாய்ப்பிற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன்.
நல்ல சமாரியனின் உவமை இன்று நம்முடைய வாழ்வில் மீண்டும் ஒலிக்கிறது. ஜெருசலேமிலிருந்து எரிக்கோவுக்குச் செல்லும் ஆபத்தான பாதையைப் போல, லம்பேதூசாவும் லினோசாவும் இன்று ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் உயிரைப் பணயம் வைத்து கடந்து செல்லும் பாதையாக மாறியுள்ளன. பலர் கடலில் உயிரிழந்துள்ளனர்; பலர் அனைத்தையும் இழந்து இக்கரையை அடைந்துள்ளனர். அவர்களைக் காணும் தருணம், எந்தக் கருத்தியலையும் விட மனிதநேயத்துடன் அவர்களுக்கு அருகில் நிற்குமாறு நம்மை அழைக்கிறது. நம் அயலானாக இருப்பது என்பது, அயலானைப் போல செயல்படுவதில்தான் உள்ளது. லம்பேதூசா மக்களே, நீங்கள் வெளிப்படுத்திய ஒற்றுமை மற்றும் இரக்க உணர்விற்காக உங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்கிறேன். தன்னார்வத் தொண்டர்கள், கடலோரக் காவல்படை, உள்ளாட்சி நிர்வாகங்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் மனிதநேயப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் என் நன்றிகள். கடலில் ஆபத்தில் இருந்த சகோதரர்களையும் சகோதரிகளையும் காப்பாற்றிய உங்கள் அன்பு, இறைவனின் இரக்கத்தின் உயிருள்ள சாட்சியாக விளங்குகிறது. இங்கு இருக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அவர்கள் உதவியைப் பெற்றவர்கள் மட்டுமல்ல; தங்கள் பயணத்தில் தங்களைப் போலவே துன்பப்படும் மற்றவர்களுக்கும் துணைநின்றவர்களாக இருக்கின்றனர்.
அன்பு என்பது சுதந்திரமான தேர்விலிருந்து பிறக்கிறது. ஆனால், சிலர் அயலானாக இருக்கத் தேர்ந்தெடுக்கவில்லை; சிலர் எந்த முடிவையும் எடுக்காமல் விலகிச் செல்கின்றனர். கடலில் உயிரிழந்தவர்களின் மரணத்திற்குப் பின்னால், எடுக்கப்பட்ட முடிவுகளும், எடுக்கப்படாத முடிவுகளும் உள்ளன. வறுமை, அநீதி, ஊழல், அச்சம், பாகுபாடு, பிறரது துயரத்தில் இலாபம் தேடும் மனப்பான்மை ஆகியவை நல்ல சமாரியனின் உவமையில் "வழியைக் கடந்து சென்றவர்களின்" மனநிலையையே இன்று பிரதிபலிக்கின்றன. கடவுளின் அன்பு எல்லைகளற்றது. எனவே, சமய வேறுபாடு ஒருபோதும் பாகுபாட்டிற்குக் காரணமாக இருக்கக் கூடாது. இறைவனை நேசிப்பதும், அயலானை நேசிப்பதும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதவை. பிறரின் வேதனையைக் கண்டு நின்று, மனம் உருகி, அவர்களுக்கு உதவுவது வழியாகவே நாம் இறைவனின் அன்பில் பங்கெடுக்கிறோம்.
இரக்கமும் கருணையும் மனிதனை மாற்றுகின்றன. அவை குடும்பத்தையும், சமூகத்தையும், உலகத்தையும் மாற்றும் ஆற்றல் கொண்டவை. அதுவே "அன்பின் நாகரிகம்" உருவாகும் பாதையாகும். அந்த நாகரிகம் ஒரே ஒரு பெரிய செயலால் உருவாகாது; மாறாக, அன்றாட வாழ்வில் செய்யப்படும் சிறிய ஆனால் உறுதியான அன்புச் செயல்களின் கூட்டுத்தொகையாக அது உருவாகும். அந்த உண்மைக்கு நீங்கள், லம்பேதூசா மக்களே, உயிருள்ள சாட்சிகளாக இருக்கிறீர்கள். புலம்பெயர்வு இன்று ஐரோப்பா மட்டுமல்ல, உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்தச் சவாலை வெறும் அவசரநிலையாக மட்டும் பார்க்காமல், மனித மாண்பை மதித்து, வரவேற்று, பாதுகாத்து, உடனிருந்து, சமூகத்தில் ஒருங்கிணைக்கும் நீண்டகால அணுகுமுறையை உருவாக்க வேண்டும். இதில் அரசுகளுக்கு மட்டுமல்ல, குடிமக்கள் சமூகத்திற்கும், திருஅவைக்கும் முக்கியப் பொறுப்பு உள்ளது.
இந்தத் தீவிற்கு ஓய்வெடுக்க வருபவர்களும், உங்கள் அன்பையும் மனிதநேயத்தையும் கண்டு மேலும் மனிதநேயமிக்கவர்களாக மாற வேண்டும். உண்மையான ஓய்வு என்பது வாழ்க்கையின் அர்த்தத்தை மீண்டும் கண்டறிவதிலும், நீதியும் சகோதரத்துவமும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதிலும் உள்ளது.
பலிபீடத்தின் அருகில் இருக்கும் "பாதுகாப்பான துறைமுக அன்னை"யின் திருவுருவத்தை நோக்கி நாம் அனைவரும் நம்பிக்கையுடன் செல்வோம். இறைவனிடமே அனைவருக்கும் பாதுகாப்பான துறைமுகம் உள்ளது. ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகமும் அந்தப் பாதுகாப்பின் அடையாளமாக உலகில் விளங்க அழைக்கப்பட்டுள்ளது. லம்பேதூசா மற்றும் லினோசா சமூகங்களே, உங்கள் வாழ்வில் நம்பிக்கை, விசுவாசம், அன்பு ஆகியவை என்றும் குறையாமல் நிலைத்திருக்க இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
நன்றி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
