மனித உயிரின் புனிதத்தை மதிக்க திருத்தந்தை இறைவேண்டல்
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஒவ்வொரு மனித உயிரும் இறைவனின் புனிதமான கொடை என்பதை உணர்ந்து, அதன் மாண்பைப் பாதுகாக்குமாறு உலகெங்கிலும் உள்ள நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜூலை 02, வியாழனன்று, வெளியிட்டுள்ள ஜூலை மாதத்திற்கான தனது இறைவேண்டல் கருத்தில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, நிபந்தனையின்றி வாழ்வை வரவேற்கவும், பலவீனமானவர்களைக் கனிவோடு அரவணைக்கவும், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் மரியாதையோடு வழிநடத்தவும், குரலற்றவர்களின் குரலாக நின்று அவர்களைத் துணிவோடு பாதுகாக்கவும் வலியுறுத்தினார்.
பிறர் மீது அலட்சிய மனப்போக்கைக் காட்டுவதாலும், மனிதரைப் புறக்கணிக்கும் கலாசாரத்தில் சிக்கிக் கொள்வதாலும், அவர்களை அன்பிற்குரியவர்களாகக் காணத் தவறியதற்காக இறைவனிடம் மன்னிப்புக் கோரிய திருத்தந்தை, மனித உயிரை எப்போதும் மதித்து தேர்ந்தெடுக்கும் புதிய இதயத்தையும், அதை நடைமுறைச் செயல்களால் பாதுகாக்கும் தாராள மனப்பான்மையையும் அனைவருக்கும் அருளுமாறு இறைவேண்டல் செய்தார்.
திருஅவை வாழ்வின் நற்செய்திக்கு உயிரோட்டமான சாட்சியாக இருந்து, ஒவ்வொரு உயிரும் வரவேற்கப்பட்டு மதிக்கப்படும் இல்லமாக விளங்க வேண்டும் என்றும், யாரும் புறக்கணிக்கப்படாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
இறுதியாக, ஆண்டவர் இயேசுவைப் போல மென்மை, உண்மைத்தன்மை மற்றும் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் ஒவ்வொரு மனித உயிரையும் நேசித்து, அதன் ஒப்பற்ற மாண்பை வார்த்தைகளாலும் செயல்களாலும் உலகிற்கு அறிவிக்கும் சாட்சிகளாக வாழ அனைவருக்கும் அழைப்பு விடுத்து திருத்தந்தை தனது இறைவேண்டலை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
