காஸ்தல் கந்தோல்ஃபோவில் படைப்பைப் பாதுகாப்பதற்கான சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், செப்டம்பர் 1ஆம் நாள் காஸ்தல் கந்தோல்ஃபோவில் உள்ள லாவுதாத்தோ சி தோட்டத்தில், படைப்பைப் பாதுகாப்பதற்கான சிறப்புத் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்ற உள்ளார் என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கான திருப்பீடத் துறையும், ‘இறைவா உமக்கே புகழ்’ உயர்கல்வி மையமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.
உலகப் படைப்புப் பாதுகாப்பு செப நாள் மற்றும் படைப்பின் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்தத் திருப்பலி நடைபெறுகிறது. செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் இந்நிகழ்வு, கிறிஸ்தவர்கள் அனைவரும் இறைவேண்டுதல், மனமாற்றம் மற்றும் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதற்கான செயல்பாடுகள் வழியாக தங்களது பொறுப்புணர்வைப் புதுப்பிக்க அழைப்பு விடுக்கிறது.
“ஒவ்வொரு கொடையும் ஒரு பொறுப்பை உருவாக்குகிறது” என்று கூறிய ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மைக்கேல் செர்னி அவர்கள், படைப்பு என்பது பயன்படுத்தப்பட வேண்டிய வளம் மட்டுமல்ல; நன்றியுடன் ஏற்றுக்கொண்டு அன்புடன் பாதுகாக்க வேண்டிய இறைவனின் கொடை என்றும் வலியுறுத்தினார்.
இறைவா உமக்கே புகழ் உயர்கல்வி மையத்தின் தலைமை இயக்குநர் கர்தினால் ஃபாபியோ பாஜியோ அவர்கள், படைப்பைப் பாதுகாப்பதும் மனித மாண்பை மேம்படுத்துவதும் ஒரே கிறிஸ்தவப் பணியின் இரு அம்சங்கள் என்று குறிப்பிட்டார். சுற்றுச்சூழல் சீரழிவு, வறுமை, காலநிலை நெருக்கடி மற்றும் மோதல்களால் அதிகம் பாதிக்கப்படுவோரைக் கவனிப்பதே அயலானை அன்புசெய்வதன் ஓர் அடையாளம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
