புனித பேதுரு பெருங்கோவில் புனித பேதுரு பெருங்கோவில்   (ANSA)

அன்பின் மகிழ்ச்சி திருத்தூது அறிவுரை மடலின் 10-வது ஆண்டு நிறைவுத் திருப்பலிக்குத் தலைமை தாங்கும் திருத்தந்தை!

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘அன்பின் மகிழ்ச்சி’ (Amoris laetitia) திருத்தூது அறிவுரை மடலின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி, அக்டோபர் 14 அன்று நடைபெறும் சந்திப்பின் நிறைவில் திருத்தந்தை பதினான்காம் லியோ சிறப்புத் திருப்பலி நிறைவேற்ற உள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அன்பின் மகிழ்ச்சி’ என்ற திருத்தூது அறிவுரை மடலின் 10-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வரும் அக்டோபர் 14 அன்று இடம்பெறும் ஒரு சந்திப்பின் நிறைவில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்ற உள்ளார்.

நவீன உலகில் குடும்பங்கள் எதிர்க்கொள்ளும் சவால்களைக் குறித்து இரண்டு ஆண்டுகள்  ஆயர்கள் மாமன்றக் கூட்டத்தில் விவாதித்த பிறகு, 2016 ஆம் ஆண்டு புனித யோசேப்பின் பெருவிழா நாளான மார்ச் 19 அன்று இந்த ஆவணம் வெளியிடப்பட்டது.

இந்தத் திருத்தூது மடல் வெளியிடப்பட்டதன் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி, அதன் போதனைகளைப் பிரதிபலிக்கவும், இன்றைய குடும்பங்களுக்கு நற்செய்தியை எவ்வாறு சிறப்பாக அறிவிப்பது என்பது குறித்து கலந்துரையாடவும், உலகம் முழுவதிலுமுள்ள ஆயர் பேரவைகளின் தலைவர்களை உரோம் நகருக்கு திருத்தந்தை அழைத்துள்ளார்.

வரவிருக்கும் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள்

வரவிருக்கும் வாரங்களில் திருத்தந்தை அவர்கள், பல முக்கியமான திருவழிபாட்டு நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்க உள்ளார். உரோம் நகருக்கு அருகிலுள்ள ஜெனாஸானோவில் அமைந்துள்ள நல்லாலோசனை மரியா திருத்தலத்தில் அவர் திருப்பலி நிறைவேற்றுவார்.

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, 2025 மே 10 அன்று அவர் ஏற்கனவே இத்திருத்தலத்திற்கு வருகை தந்திருந்தார். திருத்தந்தையாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் அங்கம் வகித்த அகுஸ்தீனியன் சபையின் பொறுப்பில் இப்பேராலயம் உள்ளது.

பிறகு செப்டம்பர் 25 முதல் 28 வரை, திருத்தந்தை பிரான்ஸ் நாட்டிற்குத் தனது திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்வார். அங்கு பாரிஸ், லூர்து மற்றும் மெட்ஸ் ஆகிய இடங்களில் திருவழிபாடுகளுக்குத் தலைமை தாங்கும் திருத்தந்தை, யுனெஸ்கோ (UNESCO) தலைமையகத்திற்கும் செல்வதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் 8 அன்று, பாப்பிறை பல்கலைக்கழகங்களின் கல்வியாண்டு தொடக்கத்தை முன்னிட்டு திருத்தந்தை திருப்பலி நிறைவேற்ற உள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

29 ஆகஸ்ட் 2026, 10:45