இலத்தீன் அமெரிக்காவில் போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திருஅவை துணைநிற்க வேண்டும்: திருத்தந்தை
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
போதைப்பொருள் பழக்கம், வன்முறை, வறுமை மற்றும் சமூகப் புறக்கணிப்பு ஆகியவற்றின் விளைவுகளால் அவதியுறும் குடும்பங்களுக்கு இலத்தீன் அமெரிக்காவில் உள்ள திருஅவை உறுதுணையாக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
ஆகஸ்ட் 27, வியாழனன்று, இலத்தீன் அமெரிக்காவிற்கான திருத்தந்தை ஆணையம் (Pontifical Commission for Latin America), CELAM மற்றும் அமெரிக்க நாடுகள் அமைப்பு (OAS) ஆகியவை இணைந்து நடத்திய "இலத்தீன் அமெரிக்காவில் போதைப்பொருள் பழக்கம்" என்ற தலைப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகளை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, போதைப்பொருளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் தடுப்பு, மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பில் திருஅவையின் முயற்சிகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகளாவிய அமைப்புகளுடனான ஒத்துழைப்பு, அறிவியலுக்கும் இறைநம்பிக்கைக்கும் இடையிலான உரையாடல், கண்டங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்வதற்கான பொதுவான மொழியாக பயன்படும் இறைநம்பிக்கை ஆகியவற்றை கூட்டுறவிற்கான நான்கு பாலங்களாகத் திருத்தந்தை அடையாளம் காட்டியுள்ளார்.
மேலும் குடும்பத்தின் முக்கியப் பங்கினை வலியுறுத்திய திருத்தந்தை, அதை "இல்லத் திருஅவை" என்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான மிக முக்கியமான பாதுகாப்பு என்றும் விவரித்ததுடன் "நல்ல குடும்பத்தை விட போதைப்பொருளுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பு வேறு எதுவுமில்லை" என்றும் கூறியுள்ளார்.
போதைப்பொருள் பயன்பாடு, வன்முறை, குழந்தைகளைக் குற்றச் செயல்களில் ஈடுபடுத்துதல், வறுமை மற்றும் வாய்ப்புகளின்மை ஆகியவற்றால் சிதைக்கப்பட்ட குடும்பங்கள் குறித்தும் திருத்தந்தை தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
மனிதத் துன்பங்களை நேரடியாகத் தொட வேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, போதைப்பழக்கத்துடன் போராடி வருபவர்களிடம் திருஅவை அன்புடனும் இரக்கத்துடனும் நெருங்கிச் சென்று, அவர்களுக்குத் துணையாக நிற்க வேண்டும் என்று ஊக்குவித்துள்ளார்.
இறுதியாக “சாலையோரத்தில் கைவிடப்பட்ட அனைவருக்கும் திருஅவை ஒரு குடும்பமாக இருக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, அவர்களுக்காக நின்று, அவர்களை அணுகி, இரக்கம் காட்டி, அவர்களின் காயங்களைக் குணப்படுத்தி, உணவளித்து, பாதுகாப்பான புகலிடமாக திருஅவை திகழ வேண்டும் என்று வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
