திருத்தூதரக அரண்மனை. திருத்தூதரக அரண்மனை.  (ANSA)

முதுபெரும் தந்தையர்களை நீக்க கிழக்கத்திய ஆயர் மாமன்றங்களுக்கு புதிய அதிகாரம்!

கிழக்கத்திய கத்தோலிக்கத் திருஅவைகளின் ஆயர்கள் மாமன்றங்களுக்கு, தீவிரமான மற்றும் தீர்க்க முடியாத காரணங்களால் தொடர்ந்து பணியாற்ற முடியாத முதுபெரும் தந்தையர்களின் பதவி விலகலைக் கோருவதற்கான புதிய அதிகாரத்தை திருத்தந்தை வழங்கியுள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

கிழக்கு கத்தோலிக்கத் திருஅவைகளின் ஆயர்கள் மாமன்றத்திற்கு, தகுந்த காரணங்களால் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலையில் இருக்கும் முதுபெரும் தந்தையரை பதவியிலிருந்து நீக்குமாறு கோருவதற்கான புதிய அதிகாரத்தை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கியுள்ளார்.

ஆகஸ்ட் 29 அன்று “இருதரப்பு உடன்பாடு” (Mutua concordia) என்ற தலைப்பில் " தானாக முன்வந்து (motu proprio) வெளியிட்ட திருத்தூது மடல் மூலம், கிழக்குத் திருஅவைகளின் சட்டத் தொகுப்பின் 106 மற்றும் 126 ஆகிய விதிகளைத் திருத்தந்தை திருத்தியுள்ளார்.

புதிய விதிகள், முதுபெரும் தந்தைக்கும் ஆயர்கள் மாமன்றத்திற்கும் இடையிலான தீர்க்க முடியாத தீவிர மோதல்களைத் தீர்ப்பதற்கான நடைமுறையை வகுக்கின்றன. கடுமையான காரணம் இருந்தால், முதுபெரும் தந்தை பதவி விலகுமாறு மாமன்றம் கோரலாம். அவர் மறுத்தால், வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இரகசிய வாக்கெடுப்பு நடத்தி, பதவி விலகலைக் கோரலாம்.

முறையான சட்ட வழிமுறைமையை உறுதிப்படுத்தும் வகையில், மாமன்றத்திற்கு முன் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை முதுபெரும் தந்தைக்கு வழங்கப்பட வேண்டும்.

இருப்பினும், இறுதி முடிவு திருத்தந்தையின் ஒப்புதலுக்கு உட்பட்டதாகும். மாமன்றம் எவ்வித உள் அல்லது வெளி அழுத்தமுமின்றி சுதந்திரமாக முடிவெடுப்பதை உறுதிசெய்து, உரோமையில் உள்ள திருத்தந்தை உத்தரவாதம் அளிப்பவராக செயல்படுகிறார்.

இந்தச் சீர்திருத்தம் பாதிக்கப்பட்ட உறவை மீட்டெடுக்கவும், கிழக்குக் கத்தோலிக்க ஆயர் மாமன்றங்களின் தன்னாட்சி உரிமைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அவற்றின் பங்கைப் பலப்படுத்தவும் முயல்கிறது என்று திருத்தந்தை கூறினார். இந்த விதிகள் முதன்மை பேராயர் நிர்வகிக்கும் திருஅவைகளுக்கும் (major archiepiscopal Churches) பொருந்தும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

31 ஆகஸ்ட் 2026, 10:31