காஸ்டெல் கந்தோல்போவில் திருப்பலி மறையுரையாற்றிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள். காஸ்டெல் கந்தோல்போவில் திருப்பலி மறையுரையாற்றிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள்.  (@VATICAN MEDIA)

வெறுப்புக்கு இடம் கொடுக்காதீர்கள்; அன்பின் வழியை நாடுங்கள் : திருத்தந்தை

ஆகஸ்ட் 29 அன்று காஸ்தல் கந்தோல்போவில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, துன்பம், வன்முறை, பிரிவினை போன்ற “எதிர்க்காற்றுகளுக்கு” மத்தியிலும் இறைமக்கள் நம்பிக்கையில் உறுதியாக இருக்க அழைப்பு விடுத்தார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

மக்கள் வெறுப்புக்கும் வன்முறைக்கும் இடம் கொடுக்க வேண்டாம் என்றும், அன்பின் வழி மட்டுமே மனிதகுலத்தை அமைதியையும் வாழ்வையும் நோக்கி அழைத்துச் செல்ல முடியும் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.

ஆகஸ்ட் 29, சனிக்கிழமையன்று காஸ்தல் கந்தோல்போவில் உள்ள ஏரிகளின் தூய அன்னை மரியாள் திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றியபோது இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, இயேசு தண்ணீரின் மீது நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டியதுடன் துன்பம், வன்முறை மற்றும் பிரிவினை என்ற "எதிர்க்காற்றுகளுக்கு" மத்தியிலும் இறைமக்கள் நம்பிக்கையில் உறுதியாக இருக்குமாறு ஊக்கப்படுத்தினார்.

இயேசு புயலை அமைதிப்படுத்தி, அச்சத்தில் தவித்த சீடர்களைப் பாதுகாப்பாகக் கரைசேர்த்தது போல, கிறிஸ்தவர்களும் கடவுள்மீது நம்பிக்கை கொண்டு, வாழ்வும் அன்பும் நிறைந்த பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

கிறிஸ்துவின் பாடுகளையும் சிலுவையையும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை, தன்னலத்தைத் துறந்து, தங்கள் சிலுவையைச் சுமந்து இயேசுவைப் பின்பற்றுமாறு சீடர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை எடுத்துரைத்ததுடன் “அன்பின் வழி மட்டுமே வாழ்வின் வழி” என்று வலியுறுத்தினார்.

மேலும் வெறுப்பையும் வன்முறையையும் கடுமையாகக் கண்டித்த திருத்தந்தை, அவை அநீதிக்கு எதிரான பதிலடியாக இருந்தபோதிலும், "அவற்றைக்கொண்டு எந்த நல்ல முடிவையும் எட்ட முடியாது" என்றும் "அவை அழிவையும் மரணத்தையும் மட்டுமே தரும்" என்றும் குறிப்பிட்டார்.

"காயம் எதுவாக இருந்தாலும், குற்றம் எதுவாக இருந்தாலும், தீமை நமது மனிதத்தன்மையைச் சிதைக்க நாம் அனுமதிக்கக் கூடாது" என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.

திருப்பலி நிறைவடைந்ததும், திருத்தந்தை அவர்களும் இறைமக்களும் ஏரியின் அன்னை மரியாவின் திருவுருவத்தைச் சுமந்தபடி “ட்ரோபிகானா” பகுதிவரை வீதிகளில் திருப்பவனியாகச் சென்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

31 ஆகஸ்ட் 2026, 10:15