நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்குப் பிந்தைய காட்சி. நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்குப் பிந்தைய காட்சி. 

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இறைவேண்டல் செய்த திருத்தந்தை!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் மற்றும் காணாமல் போனோர் குறித்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆன்மீக ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 27, வியாழன்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிடப்பட்டு  அனுப்பியுள்ள தந்திச் செய்தியில் இவ்வாறு குறிப் பிட்டுள்ள திருத்தந்தை,  இறந்தவர்களின் ஆன்மாக்களை இறைவனின் இரக்கத்தில் ஒப்படைத்து அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது ஆன்மீக ரீதியிலான உடனிருப்பை உறுதிப்படுத்திய திருத்தந்தை, காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்களைத் தேடி வரும் மீட்புக் குழுவினருக்காகவும் இறைவேண்டல் செய்தார்.

அந்நாட்டின் சீனாவுடனான வடக்கு எல்லைக்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை நீர், சேறு மற்றும் இடிபாடுகள் கொண்ட ஒரு பெரும் வெள்ளம் அடித்துச் சென்றதில், நேபாளத்தில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 900-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். பக்கத்து நாடான திபெத்திலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர், இதன் மூலம் பாதிக்கப்பட்ட பகுதியில் காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,500 ஆக உயர்ந்துள்ளது.

இமயமலைப் பனிப்பாறையின் ஒரு பகுதி சரிந்ததால் இந்தப் பேரழிவு ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது திடீர் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி குடியிருப்புப் பகுதிகளை அழித்துள்ளது. சாலைகள், பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஒரு முக்கிய எல்லைப் பகுதி ஆகியவை கடுமையாக சேதமடைந்தன.

ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள், காவல் துறையினர் மற்றும் அவசரகால மீட்புப் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர், மேலும் உலங்கு வானூர்திகள் மூலம் உயிர் பிழைத்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பல நாடுகளில் இருந்தும் உதவிகள் வரத் தொடங்கியுள்ள அதே வேளையில் அதிகரித்து வரும் வெப்பநிலையின் காரணமாக இமயமலையில் பனிப்பாறைகளின் உறுதியற்ற தன்மை அதிகரித்து வருவது குறித்த கவலைகளும் பெருகி வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

28 ஆகஸ்ட் 2026, 13:53