ஆகஸ்ட் 26 நிலச்சரிவுக்குப் பின்னர் கியிரோங் துறைமுகத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள். ஆகஸ்ட் 26 நிலச்சரிவுக்குப் பின்னர் கியிரோங் துறைமுகத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள். 

ஹைட்டியில் பிணையக்கைதிகளை விடுவித்து, வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க திருத்தந்தை அழைப்பு!

ஆகஸ்ட் 30 அன்று காஸ்தல் கந்தோல்போவில் வழங்கிய மூவேளை இறைவேண்டல் உரையின் முடிவில், ஹைட்டியில் பிணையக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்குமாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அழைப்பு விடுத்தார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஹைட்டியில் பிணையக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பவர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 30, ஞாயிறன்று காஸ்தல் கந்தோல்போவில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின்  இறுதியில் இந்த அழைப்பை விடுத்த திருத்தந்தை, ஹைட்டியின் கென்ஸ்காஃப் பகுதியில் அண்மையில்  நடந்த படுகொலை குறித்துத் தனது ஆழ்ந்த துயரத்தையும் வெளிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது இறைவேண்டல்களை உறுதி செய்துள்ள திருத்தந்தை , பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, அனைத்து வகையான வன்முறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமாறு பொறுப்பில் உள்ளவர்களை வலியுறுத்தினார்.

நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள், காணாமல் போனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீட்புப் பணியாளர்களுக்காகவும் திருத்தந்தை இறைவேண்டல் செய்தார்.

மேலும் துன்பங்களைக் குறைக்கவும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர உதவிகளை வழங்கவும் கூடுதல் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட அவசர நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பிறரன்புப் பணிக்கான திருப்பீடத் துறையின் மூலம், நேபாள காரித்தாஸ் அமைப்புக்குத் திருத்தந்தை அவர்கள் நிதி உதவி அனுப்பியுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

பிரிவினைகளைக் கடந்து, நீதியை உயர்த்திப் பிடித்து, மன்னிப்பைத் தொடர்ந்து கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அமைதிக்கான தனது அழைப்பையும் மீண்டும் புதுப்பித்துள்ளார்.

இறுதியாக, வரவிருக்கும் படைப்பைப் பராமரிப்பதற்கான உலகளாவிய இறைவேண்டல் நாளை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, காயம்பட்ட இந்த உலகத்திற்கு இறைவனின் அமைதியை வழங்கும் வழிகளாக மாற இறைவேண்டல் செய்யவும், செயல்படவும் கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்து நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

31 ஆகஸ்ட் 2026, 10:22