உரையாடல்வழி போரை வெல்ல முடியும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருஅவையில் தூதரக உறவு என்பது நம்பிக்கையின் கருவியாக அமைந்துள்ளது என்று கூறினார் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.
தென் கொரியாவிற்கும் திருப்பீடத்திற்கும் இடையிலான தூதரக உறவுகளின் 60-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அந்நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றின்போது இவ்வாறு உரைத்தார் பேராயர் காலகர்.
கொரிய கலாச்சாரத்தில், 60 என்ற எண் எவ்வாறு ஒரு சிறப்பு வாய்ந்த முக்கியத்துவத்தை கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டிய பேராயர் காலகர் அவர்கள், இது ஒரு புதிய வாழ்க்கைச் சுழற்சிக்கான பாதையையும் முழுமைக்கான ஒரு படிநிலையையும் தூண்டுகிறது என்றும் விளக்கினார்.
மேலும் திருவிவிலியத்திலும் கூட 60 என்ற இந்த எண் ஒரு முழுமையான நிறைவேற்றத்திற்கான தயாரிப்பைக் குறிக்கிறது என்றும், ஒருவருக்கொருவர் மீதான ஆதரவு மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய கருத்தை வெளிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்.
கொரிய அரசு மற்றும் அந்நாட்டுத் தலத்திருஅவையின் ஆயர்களால் ஆதரிக்கப்படும் காப்பக ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் முடிவோடு இந்த 60-வது ஆண்டு எவ்வாறு ஒத்துப்போகிறது என்பதை நினைவுகூர்ந்த பேராயர் காலகர் அவர்கள், இந்தத் திட்டம் வத்திக்கான் அப்போஸ்தலிக்கக் காப்பகம், நூலகம் மற்றும் சியோலில் உள்ள பாப்பிறையின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் பாதுகாக்கப்பட்ட ஆவணங்களைப் பற்றியது என்றும் விளக்கினார்.
எதிர்காலத்தின் நம்பிக்கைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்கான ஆதாரங்களைக் கடந்தவற்றிலிருந்து பெறுவதற்கு வழிவகுக்காவிட்டால், கடந்த காலத்தைப் பாதுகாப்பதும் அதை நினைவுபடுத்துவதும் ஒரு மலட்டுச் செயலாகவே அமையும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தினார் பேராயர் காலகர்.
ஆயுதப் போட்டி, அணு ஆயுத அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாதம் போன்ற நிகழ்வுகளின் மூன்றாம் உலகப் போர் துண்டு துண்டாக நடந்தது என்று கூறிய திருத்தந்தையின் எண்ணங்களைச் சுட்டிக்காட்டிய பேராயர் காலகர் அவர்கள், திருஅவையும் தூதரக அமைப்புகளும் ஒரே பணியால் ஒன்றிணைக்கப்படுகின்றன, இதுவே நம்பிக்கையின் அடையாளமாக வெளிப்படுகிறது என்றும், போர் என்பது தவிர்க்க முடியாத ஒன்றல்ல, மாறாக, அதை உரையாடல் வழியாக வென்றுகாட்ட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தக் கண்ணோட்டத்தில், திருத்தந்தைசார் தூதரக உறவு என்பது, மனித சகவாழ்வுக்கான ஒரு கருவியாகவும், நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான பொதுவான பேரார்வத்தை சாத்தியமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு குரலாகவும் மாறுகிறது என்று விளக்கிய பேராயர் காலகர் அவர்கள், எவ்வாறாயினும், அமைதி என்பது வெறும் படைகளின் (Forces) சமநிலை அல்ல, ஆனால் நீதியின் அடிப்படையில் நிறுவப்பட்ட உண்மையான அமைதி என்றும் விவரித்தார்.
உலகின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம், குறிப்பாக கிழக்கு ஆசியப் பகுதியில் நிலவும் பெரும் சவால்களை எதிர்கொள்வதில் திருப்பீடத்திற்கும் தென் கொரியாவிற்கும் இடையே எப்போதும் அதிகரித்து வரும் ஒத்துழைப்புக்கான நம்பிக்கையை வெளிப்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார் பேராயர் காலகர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்