வளர்ச்சி பெறாத நாடுகள் சார்பாக ஐ.நா.வில் திருப்பீடம்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூயார்க்கில், ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவது குறித்து ஐ.நா.வின் இரண்டு குழுக்களில் உரையாற்றியுள்ளார் பேராயர் கபிரியேலே காச்சா.
2025, ஜூலை 16 இப்புதனன்று நடைபெற்ற இந்நிகழ்வில் வளர்ந்துவரும் சிறியத் தீவு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வளர்ச்சி பெறாத நாடுகள் குறித்து ஐ.நா.விற்கானத் திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் காச்சா எடுத்துரைத்துள்ளார்.
வறுமையின் எதார்த்தம் என்பது, கோடிக்கணக்கான மக்களைத் தொடர்ந்து துன்புறுத்தி, அவர்களின் நல்வாழ்வை பாதித்து, கடவுள் கொடுத்த மாண்பைக் குறைமதிப்பிற்கு உள்ளாக்குவது என்றும், அதேவேளை அவர்களின் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை இந்த வறுமை நிலை தடுக்கிறது என்றும் பேராயர் காச்சா கூறியுள்ளார்.
பன்னாட்டு அமைப்பு வறுமையை ஒழிப்பதில் கவனம் செலுத்தும் என்று திருப்பீடம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார் பேராயர் காச்சா.
பெரும்பான்மையான வளர்ந்து வரும் நாடுகள் தங்களால் தாங்க இயலாதக் கடன்களை செலுத்தவே போராடுகின்றன என்று கூறிய பேராயர் காச்சா அவர்கள், உலகின் 340 கோடி மக்கள் வாழும் நாடுகள், மருத்துவம் மற்றும் கல்விக்கான செலவுகளைக் காட்டிலும் வட்டித் தொகைகளுக்கே அதிகமாக செலவழிக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன்தீர்வே எல்லாவற்றிற்கும் தீர்வாகாது என்று கூறிய பேராயர் அவர்கள், இருப்பினும், வளரும் நாடுகளின் எதிர்கால வளர்ச்சியை மாற்றக்கூடிய வல்லமையைக் கொண்டுள்ளது என்றும் உரைத்துள்ளார்.
இறுதியாகத் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி, திருஅவையில் கொண்டாடப்படும் இந்த யூபிலி ஆண்டு, அநியாயமாகத் திரட்டப்பட்ட செல்வங்களை மீட்டெடுத்து, மறுப்பகிர்வு செய்வதன் வழியாக தனிப்பட்ட மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு நம்மை அழைக்கிறது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், வளர்ந்து வரும் நாடுகளின் கடன்சுமையை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கைகள் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார் பேராயர் கபிரியேலே காச்சா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்