நியூயார்க்கில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மாநாடு நியூயார்க்கில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மாநாடு  

புனித நாட்டு மோதலுக்கு இரு நாடுகள் தீர்வு மட்டுமே சாத்தியமான பாதை!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான அமைதி குறித்த ஐ.நா. மாநாட்டில் உடனடி போர்நிறுத்தம், பிணையக்கைதிகளை விடுவித்தல், பாலஸ்தீன பொதுமக்களின் பாதுகாப்பு, தடையற்ற மனிதாபிமான உதவி ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Gabriele Caccia.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான அமைதி குறித்த ஐ.நா. மாநாட்டில் (ஜூலை 28–30), ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Gabriele Caccia, இரு-நாடுகள் தீர்வு மட்டுமே நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்கான ஒரே சாத்தியமான பாதை என்று வலியுறுத்தினார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இடம்பெற்ற ஹமாஸின் பயங்கரவாதத் தாக்குதலை கண்டித்த அதேவேளை, இஸ்ரேலின் தற்காப்பு உரிமை சரிசமவீத அளவானதாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பேராயர் காச்சா அவர்கள், காசாவில் மனிதாபிமான நெருக்கடி, குறிப்பாக, பொதுமக்களின் துன்பம் மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்பு அழிவு குறித்த திருப்பீடத்தின் ஆழந்த கவலையையும் தனது உரையில் வெளிப்படுத்தினார்.

குறிப்பாக, உடனடி போர்நிறுத்தம், பிணையக்கைதிகளை விடுவித்தல், பாலஸ்தீன பொதுமக்களின் பாதுகாப்பு, தடையற்ற மனிதாபிமான உதவி  ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்து அவற்றை செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் பேராயர் காச்சா.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இரண்டையும் அங்கீகரிப்பதாகவும், ஓர் இறையாண்மை கொண்ட நாட்டில் சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் மனித மாண்புடன் வாழ்வதற்கான பாலஸ்தீனியர்களின் உரிமைக்கான ஆதரவையும் உறுதிப்படுத்தினார்  பேராயர்.

எருசலேமைப் பொறுத்தவரை, அதன் மத முக்கியத்துவத்தைப் பாதுகாக்கவும், அனைத்து நம்பிக்கைகயாளர்களுக்கும் சம உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்துலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு தகுதிநிலையை வலியுறுத்தினார் பேராயர்.

இறுதியாக, போரை முடிவுக்குக் கொண்டுவரவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், மனிதாபிமான சட்டத்தை நிலைநிறுத்தவும், மறைந்த முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பை எடுத்துக்காட்டி தனது உரையை நிறைவு செய்தார் பேராயர் காச்சா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஆகஸ்ட் 2025, 11:28