உலக புலம்பெயர்ந்தோர் தின திருப்பலி மறையுரை - கர்தினால் பிட்சாபால்லா
மெரினா ராஜ் – வத்திக்கான்
நமது கதவைத் தட்டுகிற கிறிஸ்துவுக்கு ஒரு பெயரையும் முகத்தையும் கொடுப்பது மிக அவசியம் என்றும், மேய்ப்புப் பணியில் திருஅவையின் குரலாகவும் கரமாகவும் இருக்கவும் வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிட்சாபால்லா.
செப்டம்பர் 27, சனிக்கிழமை மாலை எருசலேமில் உள்ள ஆலயத்தில் உலக புலம்பெயர்ந்தோர் நாள் மற்றும் அகதிகள் நாளுக்கான திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய போது இவ்வாறு கூறினார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிட்சா பால்லா.
புலம்பெயர்ந்தோர் தினக் கொண்டாட்டம், சிந்திக்கவும், செபிக்கவும், நன்றி செலுத்தவும் நமக்கு ஒரு வாய்ப்பு என்றும், நம்மிடையே வாழும் பல்லாயிரக் கணக்கான மக்களின் தற்போதைய சூழலைக் கவனத்தில் கொண்டு செவிசாய்த்தலுக்கு நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார் கர்தினால் பிட்சாபால்லா.
புலம்பெயர்ந்த மக்களின் உறுதிப்பாட்டிற்குக் குரல் கொடுக்கவும், அவர்களுக்காக அவர்களுடன் இருந்து செபிக்கவும் இதன் வழியாக புனித பூமியின் நமது திருச்சபை சமூகத்தை ஒன்றாகக் கட்டியெழுப்பவும் வேண்டும் என்று வலியுறுத்திய கர்தினால் பிட்சாபால்லா அவர்கள், செல்வந்தரின் இதயம் தனது உடைமைகள் மற்றும் வாழ்க்கையைச் சார்ந்து, தன்னை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தது என்றும் கூறினார்.
நற்செய்தியில் குறிப்பிடப்படும் இலாசர் போல நம் வீட்டு வாசல் அருகில் இருக்கும் இலாசர்களை நாம் பார்க்க மறக்கின்றோம் என்றும், அவர்களது தேவையை மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையையும் பார்க்க முடியாத சூழல் நம்மிடையே அடிக்கடி நிகழ்கிறது என்றும் கூறினார் கர்தினால் பிட்சா பால்லா.
நற்செய்தியில் குறிப்பிடப்படும் இலாசரின் நிலையானது, புனித பூமியில் உள்ள முழு திருஅவைக்கும், சுதந்திரமான மற்றும் தெளிவான குரலாக இருக்க வேண்டிய நமது கடமையை நினைவூட்டுகின்றது என்றும், நம்மைச் சுற்றி இருப்பவர்களின் தேவையை மட்டுமல்லாது, நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையையும் பார்க்க முடியாத சூழல் நம்மிடையே அடிக்கடி நிகழ்கிறது என்றும் சுட்டிக்காட்டினார் கர்தினால் பிட்சா பால்லா.
இடம்பெயர்வு என்பது இப்போது ஒரு உலகளாவிய நிகழ்வாகும், எல்லா இடங்களிலும் உள்ளது, உலகளாவிய பதில்களைக் கோருகிறது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இது பன்னாட்டு சமூகத்தால் புறக்கணிக்க முடியாத ஒன்று என்றும், தடைகளை அதிகரிப்பது ஒருபோதும் தீர்வாகாது என்பதை வரலாறு நமக்குக் கற்பிக்கிறது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் பிட்சாபால்லா.
தடைகள் அச்சத்தைக் குறிக்கின்றன, எதிர்காலத்தின் எந்தவொரு வாக்குறுதியையும் அழிக்கின்றன, நமது பார்வையின்மையை எடுத்துக்காட்டுகின்றன என்று வலியுறுத்திய கர்தினால் பிட்சாபால்லா அவர்கள், நமது பார்வையானது புனித பூமி மட்டுமல்லாது உலகம் முழுவதும் செல்வது மிகவும் அவசியமான தேவையாகிறது என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்