அடக்கத் திருப்பலியின்போது கர்தினால் பியெத்ரோ பரோலின் அடக்கத் திருப்பலியின்போது கர்தினால் பியெத்ரோ பரோலின்  (@VATICAN MEDIA)

அமைதி, ஆக்கப்பூர்வமான சகவாழ்வுக்கு உதாரணம் பேராயர் Novatus Rugambw

பேராயர் Novatus Rugambw அவர்கள் தனது உடல்நோயை நம்பிக்கையுடனும் முன்மாதிரியான தொண்டுப்பணிகளுடனும் எதிர்கொண்டார் - கர்தினால் பரோலின்

மெரினா ராஜ் - வத்திக்கான்

பேராயர் Novatus Rugambw அவர்கள், தனது உறுதியான பக்தியுள்ள வாழ்க்கை, விவேகம், நீதி, மனிதருக்குரிய மாண்பினை செலுத்துதல் ஆகியவற்றின் கொள்கைகளைப் பாதுகாப்பதில் உறுதியுடன் இருந்தார் என்றும், பன்முகத்தன்மை இருந்தபோதிலும் அமைதியான மற்றும் ஆக்கபூர்வமான சகவாழ்வுக்கு இன்றியமையாத ஓர் அழகான உதாரணத்தை தனது வாழ்வின் வழியாக நமக்கு வழங்கினார் என்றும் கூறினார் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

செப்டம்பர் 25, வியாழன் உரோம் உள்ளூர் நேரம் காலை 9 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற பேராயர் Novatus Rugambwa அவர்களின் அடக்கத் திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு உரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பேராயர் Novatus Rugambwa அவர்கள் தனது 67ஆவது வயதில் செப்டம்பர் 16 அன்று இறைபதம் சேர்ந்தார் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.

1957 அக்டோபர் 1 ஆம் நாள் தான்சானியாவின் புகோபாவில் பிறந்த பேராயர் அவர்கள், 1986 ஆம் ஆண்டு அருள்பணியாளராக குருத்துவ அருள்பொழிவு பெற்றார் என்றும், 1991-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை திருப்பீடத்தின் பணிகளை ஆற்றி வந்தவர் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

இலத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஓசியானியாவில் தனது முதல் பணிகளை மேற்கொண்ட பேராயர் அவர்கள், 2007-ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை புலம்பெயர்ந்தோர் மக்களின் மேய்ப்புப்பணி பராமரிப்புக்கான திருத்தந்தை அவையின் துணைச் செயலாளராக இருந்தார் என்றும், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் அங்கோலா, சாவோ டோம் மற்றும் பிரின்சிப்பிற்கு பேராயராகவும் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

ஹோண்டுராஸ் மற்றும் நியுசிலாந்தில் திருத்தந்தையின் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ள பேராயர் அவர்கள், பசிபிக் பெருங்கடல் மற்றும் அதன் அருகில் உள்ள பல்வேறு தீவுகளுக்கான அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகவும் இருந்தவர் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

பேராயர் அவர்கள் தனது உடல்நோயை நம்பிக்கையுடனும் முன்மாதிரியான தொண்டுப்பணிகளுடனும் எதிர்கொண்டார் என்றும், கடவுளின் விருப்பத்திற்குத் தன்னைக் கையளித்தல் மற்றும் கடவுளின் மக்களை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக மாற்றினார் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

கடவுளுக்கு முன்பாக தன்னை பல நற்செயல்களைக் காணிக்கையாக அர்ப்பணித்தார் இறைஅருளின் பலனாகவும், இறைவனிடமிருந்து பெறும் ஒரு கொடையாகவும் தன் வாழ்வைக் கையளித்தார் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 செப்டம்பர் 2025, 16:53