திரைப்படத்தின் காட்சி திரைப்படத்தின் காட்சி 

காசாப்பகுதி சிறாரின் வாழ்க்கை சூழலை எடுத்துரைக்கும் திரைப்படம்

சிறார் தங்களது அப்பாவித்தனத்திலும் தூய்மையான மனத்திலும், ஒருவருக்கொருவர் நண்பர்களாக மாறுகின்றார்கள், நட்புறவின் வழியாக வாழ சாத்தியமான எதிர்காலத்தை அவர்கள் தேடுகிறார்கள் என்று திரைப்படமானது வலியுறுத்துகின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மத்திய கிழக்கில் நிகழும் நெருக்கடி நிறைந்த சூழல் மற்றும் உலகெங்கிலும் மோதல்கள் மற்றும் வன்முறைச் சூழல்களில் வாழும் குழந்தைகளின் பார்வையில் எதிர்நோக்கு மற்றும் உடன்பிறந்த உணர்வின் செய்தியைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு ஆவணத்திரைப்படம் ஒன்று வத்திக்கானில் வெளியிடப்பட்டது.

செப்டம்பர் 25, வியாழன் மாலை காசா பகுதி சிறார் - விடுதலை அலைகளின் மேல் என்ற கருப்பொருளில் ("The Children of Gaza - On the Waves of Freedom (How Kids Roll)",  How Kids Roll என்னும் ஆவணத் திரைப்படமானது வத்திக்கான் நூலக திரையரங்கில் வெளியிடப்பட்டது.

“எங்களுக்கும் கனவுகள் உள்ளன. எதிர்நோக்கு உள்ளது கிளர்ச்சியாளர்களை விட மேலானவர்களாகவும், எளிமையான இலக்குகளை விட அதிகமானவர்களாகவும் நாங்கள் இருக்கின்றோம் என்று அத்திரைப்படத்தில் நடித்த இளம்பெண் ஒருவர் எடுத்துரைத்தக் கருத்துக்கள் காசா சிறார்களின் இருப்பை அதிகமாக வலியுறுத்துவதாகவும், உயர்நிலையில் இருப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுப்பதாகவும் அமைந்திருந்தன.

காசாப்பகுதி சிறார் தங்களது அப்பாவித்தனத்திலும் தூய்மையான மனத்திலும், ஒருவருக்கொருவர் நண்பர்களாக மாறுகின்றார்கள், எதிரிகளாக மாற மறுக்கிறார்கள் என்றும், நட்புறவின் வழியாக வாழ சாத்தியமான எதிர்காலத்தை அவர்கள் தேடுகிறார்கள் என்றும் அத்திரைப்படமானது வலியுறுத்துகின்றது.

திரைப்படத்தின் இரண்டு கதாநாயகர்களும் சர்ஃபிங் எனப்படும் நீர் விளையாட்டு மீதான அவர்களின் ஆர்வத்தால் ஒன்றுபடுகின்றனர், இவ்விளையாட்டு அவர்கள் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ள வெறுப்பின் சிரமங்கள் மற்றும் சூழலுக்கு மத்தியிலும் பொதுவான இணக்கமானத் தளத்தைக் கண்டறிய அனுமதிக்கிறது என்பதையும் அத்திரைப்படம் வலியுறுத்துகின்றது.

ஆயுதங்களின் தொடர் தாக்குதல்கள், வன்முறைச் சுழல், குண்டுகள் விழும் அபாயத்தை அறிவிக்கும் ஒலிப்பான்கள் என அவர்களது குழந்தைப்பருவ வாழ்க்கை இடைநிறுத்தம் செய்யப்படுவதை சுட்டிக்காட்டும் வண்ணம் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 செப்டம்பர் 2025, 15:44